பாறுக் ஷிஹான்
வீதியில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாக வாகனச்சாரதிகள், பாதசாரிகள் சிரமங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள யாட் வீதியில் தேங்கி கிடக்கின்ற வெள்ளநீர் காரணமாகவே இச்சிரமங்களுக்கு பொதுமக்கள் முகங்கொடுத்துள்ளனர்.
அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் அன்றாடம் தமது போக்குவரத்து பாதையாக இவ்வீதியைப் பாவித்து வருகின்றனர்.
இவ்வாறு வெள்ளநீர் தொடர்ச்சியாக தேங்கி வடிந்தோடாமல் காணப்படுவதனால் மாற்றுப்பாதையை நாடுவதை அவதானிக்க முடிகின்றது. இச்சந்தரப்பத்தைப் பயன்படுத்தி அதிகமான காகங்கள் குளிக்கின்ற இடமாக இப்பாதை மாறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தவிர, வெள்ளநீர் தேங்கியுள்ள வீதியினால் பயணஞ்செய்கின்ற வாகனங்கள் திடீரென பழுதடைந்து தரித்து நிற்பதையும் காண முடிகின்றது.இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


