USAID நிறுவனத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த 36,000 மெட்ரிக் தொன் டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரம் அல்லது மண் உரம் நெல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.
ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களில் சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உரங்களின் முதல் தொகுதியை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வர்த்தக மற்றும் இலங்கை உர நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் 11,537 மெட்ரிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பெரும் போகத்தில் நெல் பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஹெக்டேர் நெல் நெற்செய்கைக்கு 55 கிலோ மண் உரம் வழங்க விவசாயத் திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது. மன்னாருக்கு 1,244 மெட்ரிக்தொன், வவுனியாவுக்கு 821 மெட்ரிக்தொன், கிளிநொச்சிக்கு 820 மெட்ரிக்தொன், முல்லைத்தீவுக்கு 694 மெட்ரிக்தொன், யாழ்ப்பாணத்திற்கு 297 மெட்ரிக்தொன், மட்டக்களப்புக்கு 1,824 மெட்ரிக்தொன், அம்பாறைக்கு 4,066 மெட்ரிக்தொன் மற்றும் திருகோணமலைக்கு 1,746 மெட்ரிக்தொன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கும் உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.