Ads Area

கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலி க்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி பிரதமர் தினேசுக்கு ஹரீஸ் எம்.பி கோரிக்கை !

 மாளிகைக்காடு நிருபர்


கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி க்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை)  செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த 2021.03.01 முதல் பெரியளவிலான இடப்பரப்பையும், பல்லின சமூக பரம்பலையும் கொண்ட கல்முனைக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ.லியாக்கத் அலி இரண்டு வருடங்கள் மட்டுமே குறித்த சேவை நிலையத்தில் கடமையாற்றியுள்ள நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை அளித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவரது இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதமருக்கான தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஜெ.லியாக்கத் அலி சிறந்த நிர்வாகியாகவும், தனது பொறுப்புகளை பாரபட்சமின்றி செய்ததன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயருடன் இருப்பவர் என்றும், பல்லின சமூகங்கள் வாழும் கல்முனையில் சிறந்த நிர்வாகத்தை வழங்கியவர் என்றும் மேலும் தனது கோரிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe