பாறுக் ஷிஹான்
மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்திச்சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (25) அம்பாறை மாவட்டம், கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணைப் பகுதியைச்சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிவப்பு நிற ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் உட்பட கடத்திச் செல்லப்பட்ட 20,000 மில்லி லீட்டர் கசிப்பு உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் பிரதான வீதியிலுள்ள பெரிய கல்லாறு பகுதியில் அமைந்துள்ள விசேட சோதனை சாவடியில் வைத்து கைதானார்.
இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் மேற்பார்வையில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி. எஸ்.ரத்நாயக்க வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான அதிகாரிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், புலனாய்வுப் பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரைக்கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கைதான சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையெடுத்துள்ளனர்.