பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டதையடுத்து, இம்ரான் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள்களும் ஏற்பட்டன. இதனால் குறைந்தபட்சம் இருவர் பலியாகினர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கலவரத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமரும் பிரிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிராக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
இதனையடுத்து , முன்பிணை கோருவதற்காக, இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் சென்றிருந்த நிலையில், துணை இராணுவப் படையினரால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை - நீர்த்தாரைப் பிரயோகம் அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் லாகூரில் படைத் தளபதியின் வாசஸ்தலம் மற்றும் ராவல்பிண்டியிலுள்ள இராணுவத் தலைமையகம் ஆகியவற்றுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் பல இடங்களில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இம்ரான் கானின் கைதுக்கு எதிராக பல மனுக்களை கட்சியின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்யவுள்ளனர் என பிரிஐ கட்சியின் உப தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதரவாளர்களை அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறும் ஷா மெஹ்மூத் குரேஷி கோரியுள்ளார்.