Ads Area

கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதிக்கான மய்யத்தினால் தீர்வு!

 நூருள் ஹுதா உமர்


கல்வியற் கல்லூரிகளில்  கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் கல்வி அமைச்சு தீர்வினை வழங்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நீதிக்கான மய்யம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த 08.02.2023 ஆம் திகதி  அதன் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில், செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோர் கையொப்பமிட்டு முறைப்பா டொன்றினை பதிவு செய்திருந்தனர்.

அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதானது,

கடந்த பல வருடங்களாக கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் சமய பாடநெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளுக்கு சமமான எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ் மொழி மூலமாக இந்து, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாம் பாட நெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளில் 30 மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். 2016, 2017 ஆண்டுகளிலும் மூன்று பாடநெறிகளுக்கு சமமானவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டு கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது இந்து சமய பாடத்திற்கு 40 (2019, 2020) மாணவர்களையும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு தலா 20 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க இருப்பதாக வர்த்தமானியில் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.

இந்த வர்த்தமானியை ரத்து செய்து இஸ்லாம், கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு மாணவர்களை கூடுதலாக உள்வாங்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் நீதிக்கான மய்யம் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தது.

இம்முறைப்பாட்டினை ஏற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்ட துரித நடவடிக்கை 
காரணமாக கல்வி அமைச்சு குறித்த இரு பாடநெறிகளுக்கும் கூடுதல் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதிக்கான மய்யத்திற்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள பதிலில் சமூக நிறுவனங்கள் கல்வியலாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கல்வியற் கல்லூரிகளில் இஸ்லாம், கிறிஸ்தவ பாடங்களுக்கான மாணவர்களின் எண்ணிக்கை இஸ்லாம் பாடத்திற்கு 60 ஆகவும் கிறிஸ்தவ பாடத்திற்கு 34 ஆகவும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அநீதி இளைக்கப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்த நீதிக்கான மய்யத்திற்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

நீதிக்கான மய்யம், முஸ்லிம் மாணவர்களிடமிருந்து ஞானசார தேரரின் சிபாரிசின் பேரில் பறிக்கப்பட்ட இஸ்லாம் பாட புத்தகத்தினை மீள பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe