முதலில் உங்கள் கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீருங்கள். அதனைக் கூட உங்களால் தீர்க்க முடியாத நிலையில், ஓர் அதிபராக எவ்வாறு இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.' என நேற்றைய சந்திப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டமைப்புடனான சந்திப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பர்தன் தலைமையிலான குழு நேற்று பிற்பகல் அதிபரை சந்தித்து கலந்துரையாடியது.
குறித்த சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாளை வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க அதிபர் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண எம்.பிக் களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் அதிபர் சந்திப்பதாகவே முன்னர் ஏற்பாடாகியிருந்தது.
மாவை சேனாதிராஜா
ஆனால் நேற்றைய சந்திப்பில் இவ்விடயம் முன்வைக்கப்பட்டதை அடுத்து அந்த முடிவை அதிபர் மாற்றியுள்ளார்.
மேலும் நேற்றைய சந்திப்பில் மாவை சேனாதிராஜா நீங்கள் தானே அதிபர் . உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு கட்டளையிட்டு காணிகளை விடுவியுங்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.
இதன்போது சற்றுக்கோபமடைந்த ரணில், முதலில் உங்கள் கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீருங்கள். அதனைக் கூட உங்களால் தீர்க்க முடியாத நிலையில் உள்ள போது, ஓர் அதிபராக எவ்வாறு நீங்கள் கூறுவது போன்று இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும் என மாவையை நோக்கி வினா எழுப்பியிருந்தார்.
மேலும் இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்,
அதிபருடனான சந்திப்பின்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பு குறித்துப் பேசினோம்.
இச்சந்திப்புக்களுக்கு வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
அதிகாரப் பகிர்வு
அதுமாத்திரமன்றி நலலிணக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பேசவேண்டுமெனில் நாம் கிழக்கு மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்துதான் அச்சந்திப்புக்களில் பங்கேற்போம் என்றும் உறுதியாகக் கூறினோம்.
அதனையடுத்து 11 மற்றும்12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சந்திப்புக்களுக்குவடக்கு, கிழக்கு ஆகிய இருமாகாணங்களையும் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுவதற்கு அதிபர் இணங்கியுள்ளார்.
அதன்படி 11 ஆம் திகதி நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்கீழ் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கர வாதத்தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும். அதேபோன்று 12ஆம் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்படும்.
மேலும் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசும்போது எந்தெந்த ஆவணங்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் எம்மிடம் வினவினார். எனவே இவ்விவகாரத்துடன் தொடர்புடைய முக்கிய கடந்தகால ஆவணங்கள் தொடர்பில் நாம் எடுத்துரைத்தோம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை 13ஆம்திகதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அச்சந்திப்பைப் பிற்போடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.