தோஹா: கத்தாரில் வீட்டில் இருந்தபடியே சொந்த வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு இப்போது அதிகமான வீட்டு வணிகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. கத்தாரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் 15க்கும் மேற்பட்ட வீட்டு தொழில்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் எளிய நடைமுறைகள் மூலம் அதிக பணம் செலவழிக்காமல் உரிமம் பெறலாம். விண்ணப்பதாரரின் தனிப்பட்ட திறன்களின் அடிப்படையில் முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வலை வடிவமைப்பிலிருந்து சமையல் வரை:
பல்வேறு வகையான அரபு இனிப்புகள் தயாரித்தல், விசேஷ சமயங்களில் உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல், பெண்களுக்கான ஆடை தையல் மற்றும் எம்பிராய்டரி, பார்சல்-பரிசு தயாரித்தல், இணையதள வடிவமைப்பு, புகைப்பட நகல் மற்றும் புகைப்பட நிகழ்ச்சிகள், ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் காகிதங்களின் பேக்கேஜிங், வாசனை திரவியங்கள் மற்றும் புகுர் தயாரித்தல், அழகுசாதனப் பொருட்கள் தயாரித்தல், பேஸ்ட்ரி தயாரித்தல் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் பராமரிப்பு, வலைப்பக்க வடிவமைப்பு, காபி மற்றும் பல்வேறு வகையான மசாலாக்கள் தயாரித்தல் ஆகியவற்றும் அனுமதி அளிக்கப்படுகின்றது.
வணிக உரிமம் பெற:
உரிமத்திற்குத் தேவையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட வணிக உரிமச் சேவை விண்ணப்பப் படிவம், கட்டிட நிறைவுச் சான்றிதழ், நிலத் திட்டம், உரிமையாளரின் தடையில்லாச் சான்றிதழ், உரிமம் பெற்றவரின் எழுத்துப்பூர்வ உத்தரவாதம், கஹ்ராமா சான்றிதழ், விண்ணப்பதாரர் மற்றும் சொத்து உரிமையாளரின் அடையாள அட்டை மற்றும் முகவரி ஆகியவற்றைக் கொண்டு, அமைச்சகத்தின் ஒற்றைச் சாளர முறை மூலமாகவும் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பதிவு மற்றும் வணிக உரிம துறையால் உரிமம் வழங்கப்படுகிறது.

