Ads Area

பாலியல் இலஞ்சம் கோரிய 58 வயது உப பொலிஸ் பரிசோதகர் : 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

குடும்பப்பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்த 58 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ந்திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த புதன்கிழமை (22) அன்று கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்புப்பிரிவினர் மாறுவேடத்தில் சென்று கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி அறையில் வைத்து குறித்த உப பொலிஸ் பரிசோதகரை குடும்பப்பெண்ணுடன் கைது செய்திருந்தனர்.


இதன் போது ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றிற்காக நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட குடும்பப்பெண் (வயது-33) நீதிமன்ற பிணை நிபந்தனையான மாதமொருமுறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த 58 வயதுடைய  நீதிமன்ற உத்தியோகத்தரான உப பொலிஸ் பரிசோதகர் பாலியல் இலஞ்சம் கோரி தொந்தரவு செய்து வந்துள்ளார்.


இதனையடுத்து குறித்த குடும்பப்பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு வழங்கியதைத்தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஒழிப்புப்பிரிவினர் வழிகாட்டலில் கல்முனை கடற்கரைப்பகுதியிலுள்ள உல்லாச விடுதி அறையில் மாறுவேடத்தில் சென்ற இலஞ்ச ஊழல் ஒழிப்புப்பிரிவினர் குடும்பப்பெண்ணுடன் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் உப பொலிஸ் பரிசோதகரைக்கைது செய்துள்ளனர்.


மேலும், குறித்த குடும்பப்பெண்ணுடன் தொலைபேசி வாயிலாக 8 தடவைக்கு மேலாகத்தொடர்பு கொண்டு உப பொலிஸ் பரிசோதகர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட விடுதி அறையிலிருந்து பாலியலைத்தூண்டும் மாத்திரைகள் ஆணுறை உள்ளிட்ட ஒரு தொகைப்பணமும் மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மேலும், குடும்பப்பெண்ணிடம் பாலியல் இலஞ்சம்  கோரி தொந்தரவு செய்த 58 வயதுடைய  உப பொலிஸ் பரிசோதகரை விசாரணையின் பின்னர் சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரன்  முன்னிலையில் அன்றைய தினம் ஆஜர்படுத்திய போது  எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ந்திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


தொடர்ந்து 3 பிள்ளைகளின் தந்தையான அட்டாளைச்சேனைப் பகுதியைச்சேர்ந்த சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகரை  மட்டக்களப்பிலுள்ள சிறைச்சாலைக்கு இரவு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு தடுத்து வைத்த பின்னர் கொழும்பிற்கு இலஞ்ச ஒழிப்புப்பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.


இது தவிர, நீண்டகாலமாக நீதிமன்ற கடமையிலிருக்கின்ற இச்சந்தேக நபருக்கு காலை வேளை பாலியலைத்தூண்டும் மாத்திரைகள் ஆண் உறைகளை விநியோகித்தவர் யார்? மற்றும் பாதிக்கப்பட்ட பெண் போன்ற ஏனைய பெண்களிடமும் இவ்வாறு பாலியல் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதா? என இலஞ்ச ஊழல் விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  


சக கைதிகளால் தாக்கப்பட்ட சந்தேக நபர் 


குறித்த குடும்பப்பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரி கைதான உப பொலிஸ் பரிசோதகரை சிறைச்சாலைப் பேரூந்தில் வைத்து சக கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


குறித்த குற்றச்செயலைச் சுட்டிக்காட்டி குறித்த தாக்குதலை மேற்கொண்டதன் காரணமாக அவரை அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றி சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe