கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு செந்தில் தொண்டமான் அவர்களுக்கு கொடும்பாவி எரிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உச்ச உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான மான்குட்டி அவர்களுடைய முகநூல் அறிக்கைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரனூஸ் முஹம்மது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண ஆளுநர் எனும் அடிப்படையிலும் அரசியலமைப்பு தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் இருக்கும் நிதி நிலுவையினை கடந்த காலங்களில் சில அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்துள்ளமை கௌரவ ஆளுநர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து குறித்த நிதியினை மக்களுக்கு பயன்பெறக்கூடிய அவசர வேலைத் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கௌரவ ஆளுநர் அவர்களுடைய நேர்த்தி மிக்க நிர்வாக நடவடிக்கையினை குழப்பும் விதமாக அரச அதிகாரிகளைத் தங்களது கடமையினைச் செய்வதிலிருந்து தடுக்கும் முகமாக மிரட்டும் நோக்கத்துடனும் ..
பொதுமக்களை சட்டவிரோதமாக குற்றவியல் நடவடிக்கைக்குத் தூண்டி சட்டம் மற்றும் சகவாழ்வை குழப்பம் நோக்கத்துடனும் குறித்த நபர் அறிக்கை விட்டுள்ளமை தண்டனைச் சட்டக் கோவையின் அடிப்படையில் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களில் ஒன்றாகும்.
குறித்த முகநூல் அறிக்கையில் எவ்வித ஆதாரங்களையும் முன் வைக்காமல் கௌரவ ஆளுநர் அவர்களை நோக்கி அவருடைய நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தி அவதூறு சொல்லி உள்ளமை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் என்ற வகையில் அவருடைய கீர்த்தியையும் பாதித்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்வுடன் தனது ஆற்றாமையை முகநூலில் கொட்டி உள்ள இந்த குறித்த மான்குட்டி என்பவர் கௌரவ ஆளுநர் அவர்களுடைய இன மத மொழி பாரபட்சமற்ற அண்மைக்கால சேவைகளை வேண்டுமென்றே மறைப்பது மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு கௌரவ ஆளுநர் அவர்கள் மூலம் கிடைக்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் வேண்டுமென்றே தடை செய்யும் கெட்ட உள்நோக்கமும் காணப்படுகிறது.
வெறும் இனவாத உணர்ச்சி கோஷ அரசியலைச் செய்து மாற்று மத தலைவர்களுக்குள்ளே நச்சுக் கருத்தை விதைத்து அதை மிக மோசமான முறையில் அறுவடை செய்து கொண்ட முஸ்லிம் சமூகத்தை மேலும் மேலும் துருவப்படுத்தும் கேடுகெட்ட ஒரு அரசியல் அறிக்கையாகவே இந்த மான்குட்டியின் அறிக்கையை பார்க்க முடிகிறது.
மிகவும் அர்ப்பணிப்பு உள்ள முறையில் பாரபட்சமில்லாது வேகமாகவும் விரைவாகவும் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் திரு கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுடைய புகழின் மீது கொண்ட வெறுப்பும் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வும் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கவிருக்கும் அனுகூலங்களை தடுப்பதற்கு ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.