Ads Area

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களை தடுப்பு விழிப்புணர்வுக்கூட்டம்.

 பாறுக் ஷிஹான்.


கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில்  போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக சமூக மட்டத்திலுள்ள பல்வேறு தரப்பினருடனான விழிப்புணர்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் ஆரம்பமானது.


கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியும்  விசேட அதிதியாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கே.எம்.லசந்த புத்திகவும் கலந்து சிறப்பித்தனர்.


இதன் போது பொது மத அனுஸ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன், வரவேற்புரையினை கல்முனை  பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவுப்  பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல் ஏ.வாஹிட் மேற்கொண்டு நிகழ்வினை நெறிப்படுத்தினார்.


இக்கலந்துரையாடலில் பிரதான வளவாளராக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் வட, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் கலந்து கொண்டு  உரையாற்றினார்.


இக்கலந்துரையாடலில் பிரதேச சமூகப்பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனைகள், சிவில் குற்றங்கள், முரண்பாடு, குடும்பப் பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட  பல தரப்பினரிடம்  கலந்துரையாடப்பட்டன.


மேலும்ச் சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக அமைப்பு நிறுவனத்தின் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்புக்கிடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதிப்போக்குவரத்து விதிமுறை தெளிவுபடுத்தல், சமூகப்பாதுகாப்பினை மேன்படுத்துவதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.


அத்துடன், பிள்ளைகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் காரணமாகும். இவ்விடயத்தில் பெற்றோர்கள் ஒத்துழைக்காவிடின் இப்போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றமானது ஏற்படப்போவதில்லை.


இதை விட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை தமது பிள்ளைகள் போன்று கண்காணிக்க வேண்டும். இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருக்கின்றோம் என அதிதிகளாகக் கலந்து கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.


மேலும், இக்கலந்துரையாடலில் போதைப்பொருளின் தாக்கங்கள், போதைப்பொருளை  தடுப்பது எவ்வாறு, போதைப்பொருள் பொருளாதாரத்தை எவ்வாறு சீரழிக்கின்றது, போதைப்பொருளை எவ்வாறு தடுக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்  அதிதிகள் உரைகளை நிகழ்த்தினர்.


குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) உட்பட பொலிஸ் ஆலோசனைக்குழு  உறுப்பினர்கள், மதகுருமார்கள், அதிபர்கள் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் விளையாட்டுக்கழகங்கள், வர்த்தகர்கள் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள்,  பொதுமக்கள்  எனப்பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe