Ads Area

கல்முனை கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரனுக்கு 1,500 ரூபா தண்டபணமும் 55,000 ரூபா நஷ்டயீடும் விதிப்பு.

பாறுக் ஷிஹான்.


அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1,500 ரூபா தண்டபணமும் 55,000 ரூபா நஷ்டயீடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி எனப்பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.


இதன் பின்னர் சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும் மாநகர சபைக்குச் சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப்பிணையில் விடுதலை  செய்யப்பட்டிருந்தார்.


கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (30) அன்று குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கபட்ட தரப்பினர்  உட்பட ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எம்.எஸ்.காரியப்பர் வீதிப்பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று 1,500 ரூபா தண்டபணமும் 55,000 ரூபா நஷ்டயீடும்  வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.


பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித், சட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 செய்திப்பின்னணி


வீதிப்பெயர்ப்பலகையை இடித்துச்சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது - பிணையில் செல்ல அனுமதி 


கல்முனை பிரதான நெடுஞ்சாலையிலிருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.


அதே வேளை, இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டுச் சென்றிருந்தார்.


அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75,000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.


இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe