யானைப்பாதுகாப்புக்கென சட்டவிரோத மின்சாரத்தைப்பெற்று அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் யானைகளைத் துரத்திச்சென்ற சமயம் சிக்குண்டு மரணித்த இருவரது உடலங்களும் நேற்று (14) திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணை மற்றும் சட்டவைத்திய அதிகாரி (JMO) பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அத்துடன், சட்டவிரோத மின்சாரத்தைப்பெற்று மின்சார வேலியை அமைத்து இரு உயிரிழப்புக்கு காரணமானார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விவசாயி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கிண்ணையடிச்சேர்ந்த 50 வயதுடைய ஆறுமுகன் யோகநாதன், கிரானைச்சேர்ந்த 21 வயதுடைய வினாயகமூர்த்தி சுதர்ஷன் ஆகியோர் மரணமடைந்திருந்தனர்.
அத்துடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த உடலங்களை வாழைச்சேனை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரின் அகீல் எமேர்ஜென்ஸி ஹெல்பிங் யுனிட் வாகனத்தின் மூலம் மரணித்த இடத்திலிருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உரியவர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.