ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தை அடுத்து, சர்வதேசளவில் ஆகாய விபத்துகளில் பலியான அரசியல் தலைவர்களும், அந்த மரணங்களை சூழ்ந்திருக்கும் மர்மங்களும் கவனம் பெற்றிருக்கின்றன.
நேற்றைய ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் பெரும் ட்ரோன் தாக்குதலை அடுத்து இந்த சம்பவம் நேர்ந்திருப்பதால், இதன் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருக்கலாம் என்ற ஐயத்தை ஈரான் ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
இஸ்ரேல் மீதான அடுத்த சுற்று தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வந்த சூழலில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது மேற்படி ஐயத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது. இப்ராஹிம் ரைசி மட்டுமன்றி சர்வதேச அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆகாய மரணங்களிலும் இதே போன்ற மர்மங்கள் நீடித்து வருகின்றன. இந்தியாவின் சஞ்சய் காந்தி முதல் பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் வரை அந்த பட்டியல் நீளும்.
இதே ஈரானின் அண்டை தேசமான ஈராக்கின் அதிபராக இருந்த அப்துல் சலாம் ஆரிப் என்பவரின் மரணமும் அதில் அடங்கும். ஜனநாயக அடியெடுப்பிலான ஈராக்கின் இரண்டாவது அதிபரான இவர் 1958-ல் அங்கு மன்னராட்சியை அகற்றிய புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். ஏப்ரல் 13, 1966 அன்று, ஈராக் விமானப்படை விமானத்தில் பயணித்தபோது பாஸ்ரா அருகே சந்தேக விபத்தில் பலியானார்.
பிரேசிலின் இடைக்கால அதிபராக பணியாற்றிய நெரேயு ராமோஸ், ஜூன் 16, 1958-ல் விமானப் பயணத்தின்போது, பரானா மாநிலத்தில் உள்ள பெனா சர்வதேச விமான நிலையம் அருகே ஆகாய விபத்தில் பலியானார். பிலிப்பைன்ஸின் 7வது அதிபரான ரமோன் மகசேசே, ஊழலுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு மற்றும் ஜனரஞ்சக அரசியலுக்காக இன்றளவும் நினைவுகூரப்படுபவர். மார்ச் 17, 1957 அன்று அவரது பிரத்யேக விமானம், செபு நகரில் உள்ள மானுங்கால் மலையில் மோதியது. உடன் பயணித்த 23 பேர் அந்த விபத்தில் பலியானார்கள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, ஜூன் 23, 1980 அன்று விமான விபத்தில் பலியானார். டெல்லி சப்தர்ஜங் விமான நிலையம், சஞ்சய் காந்தி விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை மட்டுமே உறுதி செய்தது. இந்திரா காந்தி காலத்தில் அவரை இயக்கியதாகவும், ஆட்சி மற்றும் கட்சியில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்ததாகவும் அவருக்கு எதிரான புகைச்சல் அதிகரித்து இருந்தன. சஞ்சய் காந்தி மரணத்தின் பின்னணியில் சர்வதேச சதி வரை மர்மங்கள் பலவும் விடுவிக்கப்படாது வளைய வருகின்றன.
பிரேசிலின் 26வது அதிபரும் முன்னாள் ராணுவ சர்வாதிகாரியுமான ஹம்பர்டோ டி அலென்கார் காஸ்டெலோ பிராங்கோ என்பவர் ஜூலை 18, 1967-ல் மர்ம விமான விபத்தில் பலியானார். அவரது அதிபர் பதவிக்காலம் முடிந்த சிறிது நேரத்திலேயே, அவரது ஆகாய மரணம் நிகழ்ந்ததால், அதனை சூழ்ந்த சர்ச்சைகள் மற்றும் சதி கோட்பாடுகள் இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகின்றன.
லெபனானின் பிரதமரான ரஷித் கராமி, லெபனான் உள்நாட்டுப் போரின் போது முக்கிய பங்கு வகித்தவர். ஜூன் 1, 1987 அன்று, ஹெலிகாப்டரில் பெய்ரூட் செல்லும் வழியில் கொல்லப்பட்டார். ஹெலிகாப்டரில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு பின்னர் விசாரணையில் வெளிப்பட்டது. பாகிஸ்தானின் 6வது அதிபர் ஜெனரல் முஹம்மது ஜியா உல்ஹக் ஆகஸ்ட் 17, 1988-ல் இறந்தார். அவரது சி-130 ஹெர்குலஸ் விமானம் பஹவல்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. இயந்திர செயலிழப்பு முதல் நாசவேலை வரையிலான கோட்பாடுகளுடன், விபத்துக்கான பின்னணி இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.