Ads Area

பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி மாயம் : நான்கு பொலிஸாருக்கு தண்டனை இடமாற்றம்.

 பாறுக் ஷிஹான்.


பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமற்போன சம்வபத்தினையடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை (26) அன்று அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனையில் வீடொன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.


இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிசார் கைது செய்திருந்தனர்.


பின்னர் குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அவரது சார்பில் தோன்றிய சட்டத்தரணி குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வொன்றிக்கு அறுத்திருந்தாகவும் குற்றத்தினை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். 


குறித்த வழக்கின் சான்றுப்பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார்  நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர். 


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு குறித்த சான்றுப்பொருளைப் பார்வையிட நீதிவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்குத் தயாராக  வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.


குறித்த சான்றுப்பொருள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிசார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தி இருந்தது.

 

யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் பெக்கோவிலிருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார்.  


அதன் போது, குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன. குறித்த ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட தொலைந்து போயிருந்தன. இது பற்றி வினவிய போது ஆட்டிறைச்சியை சில பகுதிகளை தேடுதலுக்குச் சென்ற பொலிசார் எடுத்துச்சென்றமை தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று   விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். 


இதனடிப்படையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய  ஆட்டிறைச்சியைக்கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கெதிராக அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில் குறித்த ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


இதன் போது, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe