சவுதி அரேபியாவில் வாகன விபத்தினால் ஏற்படும் இறப்பு 54 சத விகிதமாக குறைந்துள்ளதாக சவுதி அரேபிய சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. 2016ம் ஆண்டில் 100,000 பேருக்கு 28.41என்ற ரீதியில் இருந்த இறப்பு வீதம் 2023ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 100,000 பேருக்கு 13.06 என்ற ரீதியில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே போல் விபத்தினால் காயமடைவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 74 பேர் விபத்தினால் காயமடைந்த நிலையில் அது தற்போது 100,000 பேருக்கு 70.87 என்ற அளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்துக்களினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்களில் உள்ள அதிகாரிகள் கடுமையான போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கு கணிசமான முயற்சிகளை செய்திருந்தமை, சாலைகளில் பொறியியல் மேம்பாடுகளைச் செயல்படுத்துதல், அத்தியாவசியப் பாதுகாப்புத் தேவைகளை வழங்குதல், போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துதல், சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்குதல் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவைகளைச் செயல்படுத்துதல் போன்றவை காரணமாக இந் நிலையினை அடைய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்