விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் 10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மல்வத்தை-03 (மஜீட்புரம்) கிராமத்தில் விவசாய உட்கட்டமைப்பு வசதிகள்,வாழ்வாதார மேம்பாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த நிதியினை பெற்றுக் கொள்ளுவதற்காக மக்கள் பங்களிப்புடனான கிராம அபிவிருத்தி திட்டமொன்றை கிராம மக்களிடம் நேரடியாக கேட்டறிந்து கொள்ளுவதற்கான செயற்பாட்டு திட்டம் தயாரிக்கும் நிகழ்வு அண்மையில் (10) மல்வத்தை-03 பல்தேவைக் கட்டிடத்தில் கிராம சேவகர் எம்.ஐ சப்றாஜ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம் யாஸீர் ஆகியோர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்கள் கலந்து கொண்டு மக்கள் பங்களிப்புடனான கிராமிய வளத் திட்டத்தின் முக்கியத்துவம் அதன் நோக்கம் ஆகியவற்றை தெளிவுபடுத்தினார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் (LLB),கலந்து கொண்டதோடு விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பள்ளிவாசல் நிர்வாகிகள் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் மக்கள் பங்களிப்புடனான கிராமிய அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் நிகழ்வுக்கு பிரதம வளவாளராக அக்கரைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.ஜமாலி கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.