Ads Area

மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் கைகலப்பு : முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் அலியார் இடைநிறுத்தம்.

 நூருல் ஹுதா உமர்.

 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடைய கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார், கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து இரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் கடந்த 2024.08.11ம் திகதி அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்தில் நடைபெற்றது. 


இக்கூட்டம் நிறைவுற்று தலைவர் மண்டபத்திலிருந்து வெளியேறிய பின்னர் கட்சியின் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி குழப்பகரமான சூழல் ஏற்பட்டிருந்தது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், பிரதித்தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் மற்றும் பிரதிச்செயலாளர் மன்சூர் ஏ.காதர் ஆகியோர் அடங்கிய குழுவொன்றை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக நியமித்திருந்தார்.


கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், பிரதித்தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகிய இருவரும் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நெரிசல் காரணமாக ஏனையோர் மண்டபத்திலிருந்து வெளியேறும் வரை காத்திருத்த வேளையில் அப்போது மண்டபத்திற்குள் நடந்த விடயங்களை நேரடியாக அவதானித்திருந்தனர். 


அதற்கு மேலதிகமாக சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.


இதனடிப்படையில், தலைமையிடம் இக்குழு முன்வைத்த பரிந்துரைக்கமைவாக தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார், இரண்டு வார காலத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe