தமிழர்களின் அரசியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பங்குள்ளது. ஆயுதப்போராட்டம் எழுச்சி பெறுவதற்கு முன்பும் போராட்டக்காலங்களிலும் போராட்டம் முடிவுற்றதற்கு பின்பும் யாழ்ப்பானப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் இராணுவ அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி துணிவுடன் செயற்பட்டு வந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் அழிவுக்குப்பின்பு தமிழர் தரப்பு பிரிந்து முரண்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவர்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் கடந்த காலங்களில் வெற்றி கண்டனர்.
தற்போது தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையின்றி பிளவுபட்டுள்ளனர். அந்த வகையில், டக்லஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும் சுமந்திரன், இரா.சாணாக்கியன் ஆகியோர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்ற நிலையில், ஸ்ரீதரன் உட்பட தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புக்கள் பொது வேட்பாளரான அரியனேத்திரனை ஆதரிக்கின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி தமிழ்ச்சமூகத்தை வலியுறுத்துவதோடு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள படிப்பினைகள் என்ன?
தலைவர் அஷ்ரபின் மரணத்துக்குப்பின்பு முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் பல கட்சிகளும் பல தலைவர்களும் உருவானதுடன், தங்களது சுயநல அரசியலை மாத்திரம் முன்கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறான நிலையில், முஸ்லிம் சமூகம் சார்ந்து தூரநோக்குடன் புத்திசாலித்தனமான அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கோ, தலைவர்களை வழிநடாத்துவதற்கோ யாழ் பல்கலைக்கழகம் போன்று முஸ்லிம்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லை.
வட, கிழக்கிலுள்ள யாழ், கிழக்கு, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2008 இலிருந்து சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டது.
ஆனால், யாழ், கிழக்குப் பல்கலைக்கழகங்களில் அவ்வாறு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலாக அதிகரிப்பதற்கு தமிழ்ச்சமூகம் அனுமதிக்கவில்லை. அதனை போராடித் தடுத்தார்கள்.
ஆனால், அநாதரவாகவுள்ள முஸ்லிம் சமூகமானது அப்பாவியாகச் செயற்பட்டதன் காரணமாக இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களே பெரும்பான்மையாகவுள்ளனர். மாணவர் ஒன்றிய நிருவாகமும் அவர்களிடமே உள்ளது.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்று தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
எங்களது பலயீனத்தாலும் முட்டாள்தனத்தாலும் தலைவர் அஷ்ரப் உருவாக்கியவற்றில் நாங்கள் இழந்தது ஏராளம். அதில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் ஒன்று.
முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது.