நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடப்போகின்றது ? அதாவது கட்சியின் மரச்சின்னத்திலா ? அல்லது சஜித் பிரேமதாசாவுடன் SJP யில் இணைந்து போட்டியிடுவதா ? அப்படியென்றால் எந்த மாவட்டங்களில் அவ்வாறு போட்டியிடுவது ?
கோத்தாவின் அரசில் இருபதாவது திருத்தத்திற்கும், ஜனாஸா எரிப்புக்கும் துணைபோன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படுமா ? புதியவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லையா ? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் கட்சி தொண்டர்கள் குழம்பிப்போய் உள்ளதனை காணக்கூடியதாக உள்ளது.
அதேநேரம் பல பக்கங்களிலிருந்தும் வருகின்ற அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் இதுவரையில் எந்தத் தீர்மானத்திற்கும் வரமுடியாத நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் காட்சிகளின் வேட்பாளர் பட்டியலானது பல இழுபறிகளுக்கு பின்பு வேட்புமனு தாக்கல் செய்கின்ற இறுதித் தினத்தின் அதிகாலையிலேயே பூர்த்தி செய்யப்படுவது வழமையாகும்.
கடந்த காலங்களைப்போன்று இலாப நோக்கில் இந்த தேர்தல் எதிர்கொள்ளப்படுமா அல்லது நஷ்டமடைந்தாலும் பருவாயில்லை கட்சியின் கட்டுக்கோப்பினை மீறியவர்களை களையெடுப்பதற்கான களமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில், கட்சிக்கு கட்டுப்படாமல் இருபதுக்கு ஆதரவளித்த ஹரிஸ், பைசல் காசிம் போன்றவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் வளங்கக்கூடாதென்று ஒரு தரப்பினர் அழுத்தம் வழங்குகின்றனர். இலாபநோக்கம் கருதாமல் ஏனையவர்களுக்கும் ஒரு பாடமாக அமையக்கூடிய இறுக்கமான கொள்கை என்றரீதியில் இந்த கருத்து ஏற்புடையது.
ஆனால் ஹரீஸ், பைசல் காசிம் போன்றோர் என்னதான் துரோகம் செய்தாலும் வாக்காளர்களை கவருகின்ற தாரகை மந்திரம் அவர்கள் இருவரிடமும் உள்ளது. அதாவது இவர்கள் இருவரையும் தவிர்த்து தேர்தலுக்கு செல்கின்றபோது முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியில் பாரிய பின்னடைவு ஏற்படும்.
ஹரீஸ், பைசல் காசிம் போன்றோர்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் இவர்கள் இருவரையும்விட அதிக வாக்கு வங்கிகளைக் கொண்டவர்களல்ல.
அத்துடன் இந்த தேர்தலில் தனியாக போட்டியிடுவதைவிட சஜித் பிரேமதாசாவின் SJP இல் இணைந்து போட்டியிடுகின்றபோது முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகமான ஆசனங்களை பெற முடியும் என்பது சிலரது வாதமாகும்.
அவ்வாரென்றால் கடந்தகாலங்களில் அதிகமான ஆசனங்களினால் சாதித்தது என்ன ? தனிப்பட்ட சலுகைகளுக்காக பிரிந்து சென்றதனை தவிர, வாக்களித்த மக்களுக்காக எதனை சாதித்தனர் என்ற கேள்வி எழுகின்றது.
இந்த தேர்தலில் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும், பழையவர்கள் ஒதுங்க வேண்டுமென்ற கோசங்கள் பரவலாக உள்ளது. இதனால் தேசிய கட்சிகளிலிருந்து பிரபலமானவர்கள் பலர் ஒதுங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் SJP யில் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றபோது குறைந்த ஆசனப்பங்கீட்டின் மூலமாக அதே பழையவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வளங்கப்படுமே தவிர, புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாத நிலை ஏற்படும். அதனால் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிடுவதன் மூலம் புதியவர்கள் மற்றும் பழையவர்கள் என இரு தரப்பினர்களையும் இணைத்து களம் இறக்க முடியும் என்பது சிலரது நியாயம்.
ஒவ்வொரு தேர்தலிலும் தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றபோது குறிப்பிட்ட தரப்பினருக்கு தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கப்படுவதனால் வாக்காளர்களுக்கு சரியான தெரிவு இல்லாமல் உள்ளதென்ற அதிருப்தியும் கட்சிக்காரர்களிடம் காணப்படுகின்றது.
எனவே இந்த தேர்தலானது இலாப நோக்கம் கருதியதாக இருக்குமா ? அல்லது எண்ணிக்கை பற்றி தயங்காமல், களையெடுக்கும் சந்தர்ப்பமாக அமையுமா ? வேட்பாளர் பட்டியல் வெளியாகும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது.