மூவகை அரசியலுக்குள் சிக்கித் தவிக்கும் சம்மாந்துறை வாக்காளர்கள்.
இம் முறையாவது தம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தினை தக்கவைப்பார்களா?
பொதுவாக தூய்மையான மோதல் என்பது யுத்தத்தினைக் குறிக்கும் தூய்மையான ஒத்துழைப்பு என்பது உண்மையான அன்பைக் குறிக்கும். ஆனால் அரசியல் இவை இரண்டினதும் கலவையாகவே பார்க்கப்படுகின்றது. இதனால் பகுத்தறிவு ரீதியிலான செயற்பாட்டு வழிமுறையாகவும் பொதுத் தெரிவினை உள்ளடக்கியதாகவும் காணப்படும் அரசியலானது இன்று இலங்கை மக்களின் குறுகிய தன்மை கொண்ட அரசியல் கலாசாரத்தால் வெறுப்புணர்வுகளின் முறைப்படுத்தப்பட்ட வடிவமாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது.
இலங்கையை பொறுத்தவரை ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பான்மை இன மற்றும் சிறுபான்மை இன அரசியல் சக்திகளால் இனவாதம் கூடிக்குறைந்தளவில் பாவிக்கப்பட்டு வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தற்போது இலங்கை அரசியலில் இனவாதம் தேக்க நிலையில் காணப்படுகின்றதே தவிர இனவாதம் இந் நாட்டில் முற்றுப்பெறவில்லை என்பதனை நாம் அனைவரும் மிகத் தெளிவாக விளங்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் தென்னிலங்கை அரசியலுக்குச் சமமான முறையில் எமது கிழக்கிலங்கை அரசியலை தற்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலோடு முன்னெடுத்துச் செல்வது பொருத்தமாக அமையுமா? என்பதனையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் தற்போது நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் நிலையில் எமது சிறுபான்மை சமூகம் அவ் ஆட்சியின் போக்கை அறியாது இவ்வாட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எமது சிறுபான்மை கட்சிகளை ஓரங்கட்ட நினைப்பது எமது அங்கீகரிக்கப்பட்ட கேள்விச் செயற்பாடுகளை குறைப்பதற்கான முயற்சியாகவே பார்க்கக்கூடியதாகவுள்ளது.
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்ட அரசியலைப் பொறுத்தவரை எமது மக்களின் ஒரே வினாவாக இருப்பது எமது பிரதிநிதிகள் இதுவரை காலமும் பாராளுமன்றில் இருந்துகொண்டு என்ன செய்தார்கள்?ஆகவே இக் கேள்வியை நாம் அனைவரும் இதய சுத்தியுடன் மாற்றிக் கேட்போமாக இருந்தால் “இப் பிரதிநிதிகள் என்ன செய்யவில்லை என்ற கேள்விக்கு எம் சமூகம் முதலில் விடை தரவேண்டும்”. ஏனெனில் பேரினவாத நிகழ்ச்சிநிரலிற்குள் சிக்குண்ட காலப்பபகுதிக்குள் எமது பிரதிநிதிகள் எமது பிராந்தியத்தின் ஆள்புல எல்லைகளை பேரினவாதிகள் கையகப்படுத்தும் தீவிர முயற்சியினை தடுத்துள்ளார்கள். ஊழல் மிகு அரசியல் கலாசாரத்திற்குள்ளும் எமது பிராந்தியத்திற்குத் தேவையான துறை ரீதியான அபிவிருத்திகளை (பாதை, சுகாதாரம், கல்வி, கலாசாரம், விவசாயம், நீர்பாசனம்…..) செய்துள்ளார்கள். இவை அனைத்திற்கும் நாம் தொடுக்கும் ஒரே கேள்வி இவ் அபிவிருத்திகளின் ஊடாக அவர்கள் பணம் சம்பாதித்து அவர்கள் முன்னேறியுள்ளார்கள். அப்படியென்றால் நாம் எமது அரசியல் கலாசாரத்தினை மாற்றிவிட்டோமா? இல்லவே இல்லை.
சாதாரணமாக எமது பிராந்தியத்தினை பொறுத்தவரை ஒரு பிரதிநிதி பாராளுமன்றத் தேர்தலுக்கு குறைந்தது 1 கோடி ரூபாய்க்களையாவது மக்களின் வாக்கினை பெறுவதற்காக செலவிடவேண்டியுள்ளது. எனவே இவ்வாறு செலவிடும் பணத்தினை அப் பிரதிநிதி எவ்வாறான வழிமுறையினூடாக பெற்றுக்கொள்வது? வெறும் கௌரவத்திற்காக இப்பதவிற்கு வரவேண்டும் ஊழல் இல்லாமல் இவர்கள் ஆட்சிசெய்ய வேண்டும் என நினைத்தால் தேர்தல் கால நிவாரணங்களை நாம் புறம்தள்ள வேண்டும். இதனை நாம் புறம் தள்ளுவோமா? அவ்வாறு புறம்தள்ளுவதற்கு நாம் என்ன வளர்முக நாடுகளில் வாழும் மக்களா? எனவே இங்கு ஊழல் கலாசாரத்தினை ஆரம்பிப்பதற்கு தூண்டுபவர்கள் யார்?
காலாகாலமாக மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கும் ஒரு அரசியல் வாதி போட்ட வீதிக்கு மேல் நின்று “இவர் எமக்கு என்ன செய்தார் என்று வாய்கூசாமல் நாம் கேட்கின்றோம். ஆனால் அவ்வாறு கேட்பவருக்கு தெரியாது குறித்த பிரதிநிதி அவ் வீதியினை போட்டதினால்தான் தன்னுடைய குமருப் பிள்ளைக்கு மாப்பிளை வந்தது என்று. இல்லாவிட்டால் அப் பிள்ளையின் திருமணம் கூட வீதி சரியில்லை என்று தள்ளிப்போயிருக்கும். (இக்கருத்தினை எமது ஊரான சம்மாந்துறையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரைப் பார்த்து ஒரு தாய் - நீ போட்டுத் தந்த றோட்டாலதான் என்ட குமருக்கு மாப்பிளை வந்தடா மன”) எமது விவசாயப் பாதைகளும் பாலங்களும் செப்பனிடப்படாவிட்டால் நாம் எவ்வாறு விவசாயம் செய்திருக்க முடியும். எமது காணிகளுக்கு எவ்வாறு கேள்வி கூடியிருக்கும். எமது பிராந்தியத்தின் பாடசாலை மற்றும் சுகாதார அபிவிருத்திகள் எவ்வாறு நடைபெற்றது” இவற்றையெல்லாம் செய்தது யார்?
எனவே இவற்றையெல்லாம் மறந்து தேர்தல் காலங்களில் வழங்கப்படும் சிறு நிவாரணத்திற்காகவும், அதிகமான மக்கள் தற்போது அந்தக் கட்சியின் பக்கம்தான் என எண்ணிக்கையில் நாம் தீர்மானித்து வாக்களிப்பது பொருத்தமாக அமையுமா?
மேலே குறிப்பிட்ட வினாக்களினூடே எமது சம்மாந்துறையின் அரசியலை நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக எமது சம்மாந்துறை மக்களில் சிலர் இலகுவில் அன்பிற்கும் எண்ணிக்கைக்கும் கட்டுப்பட்டு தமது வாக்கினை சிதரவிடுபவர்கள். (செந்நெல் வளங்கொழிக்கும் தென்கிழக்கின் இமயம், சம்மாந்துறை எனும் அன்னை எங்கள் இதயம். மருதமாம் நல் நிலத்து மையம் எங்கள் துறையே, வருவோர்க்கு வாழ்வழிக்கும் வழி எங்கள் குணமே – கலைக்குரல் ஏ அமீரின் கவிதை வரிகள்) இவர்கள் நான் மேற்சொன்ன சேவைகளைச் செய்த பிரதிநிதிகளின் சேவைகளை மறந்து தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளின் சிறு நிவாரணங்களை (இறைச்சி, அரிசி…..)பெற்று அவர்களுக்கு அன்பின் அடிப்படையில் தமது வாக்கினை இடுகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை “என்ன இருந்தாலும் அவன் ஒரு பேக்கு இறைச்சிப் பங்கு தந்த – அவனுக்குத்தான் போடனும்” இதனை விட அதிகமான சேவைகளையும் அதிகமான நிவாரணங்களையும் தந்த எமது பிரதிநிதிகளை நாம் மறந்துவிடுகின்றோம். அது மட்டுமன்றி எண்ணிக்கையில் வாக்குவங்கியுள்ள பெரும்பான்மைக் கட்சிகளுக்கு நமக்கு ஒரு பிரதிநிதியாவது அக்கட்சியினூடாக கிடைக்காது என்று தெரிந்தும் நாம் வாக்களிக்க நினைக்கின்றோம்.
மேற்குறிப்பட்ட கைங்கரியத்தினூடே பின்வரும் மூவகை அரசிலிற்குள்ளும் எமது சம்மாந்துறை மக்கள் சிக்கித்தவிக்கின்றனர்.
1. அன்பினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் (இறைச்சிப் பங்கிற்கு...... வாக்களிப்பது)
2. எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் (பெரும்பான்மையின கட்சி சார்ந்து வாக்களித்து எமது பிரதிநிதித்துவத்தினை இழப்பது)
3. அறிவினை அடிப்படையாக கொண்ட அரசியல் (எமக்கு ஒரு பிரதிநிதி வேண்டும் என்று அதனை பெற்றுக்கொள்வதற்கு சாத்தியமான முறையில் வாக்களிப்பது)
எனவே, மூவகை அரசியலுக்குள் சிக்கித் தவிக்கும் சம்மாந்துறை வாக்காளர்கள், இம் முறையாவது தம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தினை தக்கவைப்பார்களா?
-ஹம்தி-