Ads Area

கல்முனை மாநகர சபைக் குப்பைகளுக் கெதிராக மக்கள் போராட்டம்.

 (பாறுக் ஷிஹான்)


கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுவதாகக்கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.


குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப்பெரிய பள்ளிவாசல் அருகில் சனிக்கிழமை (1) நடைபெற்றதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான வீதியை மறித்துப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்த வேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், குறித்த பிரச்சினைக்கான சமரச முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.


இதன் போது, இப்போராட்டத்தில் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற ஆண், பெண்கள் உட்பட சிறுவர்கள் பங்கேற்றதுடன் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய சுலோகங்களை ஏந்தி நீதி வேண்டி கோஷங்களை எழுப்பினர்.


பின்னர் பொலிஸாரின் ஆலோசனைக்கமைய குறித்த போராட்டம் நிறைவு செய்யப்பட்டு உரிய அதிகாரிகளிடம்  பேசித்தீர்வொன்றைப்பெற ஆவண செய்ய நடவடிக்கையெடுக்க கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது தவிர, இப்பகுதியில் மாநகர சபையினராலும் தனியார் சிலராலும் கொட்டப்படும் குப்பைகளினால் பெரும் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


மேலும், குப்பைகள் எரிக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் முதல் வயது வந்தோர் சுவாசப் பிரச்சினைக்குள்ளாவதுடன் யானைகளின் அச்சுறுத்தலும் தொடர்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe