Ads Area

உள்ளூராட்சி மன்றங்களில் செயற்பாட்டு முறைமை தொடர்பில் ஆதம்பாவா எம்பிக்கு தெளிவான அறிவில்லை.

ஆதம்பாவா எம்.பியின் கருத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரான மோசமான ஒரு வன்முறைக் கருத்தாகும்- வலுக்கும் கண்டனம் ! 


தேசிய மக்கள் சக்தியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடயதான அறிவு இல்லாதவர்களாகவும், அரசாங்க அதிகார செயல்முறை குறித்த அறிவு இல்லாதவர்களாகவும் அரசியல் களத்திலே அனுபவம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும் என கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் தவிசாளர் ரனூஸ் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். 


அவரது அறிக்கையில் மேலும், நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு வாக்களித்து அவர்களின் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை ஒப்படைக்காவிட்டால் அந்த குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியினை ஒதுக்குவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டாது என  தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களுடைய கருத்தொன்றை பார்க்க கிடைத்தது. தேசிய மக்கள் சக்தி நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் தவிர அனைவருமே ஊழல் மிக்கவர்கள் என்பதால் அவ்வாறான ஊழல் மிக்கவர்களின் தலைமையில் அமையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் எவ்விதமான நிதி உதவியும் ஒதுக்காது என அவர் அதற்கு நியாயம் கற்பித்துப் பேசுகிறார்.


தேசிய மக்கள் சக்தியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடயதான அறிவு இல்லாதவர்களாகவும், அரசாங்க அதிகார செயல்முறை குறித்த அறிவு இல்லாதவர்களாகவும் அரசியல் களத்திலே அனுபவம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்குகளை முன்னெடுத்து செல்வதில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலே சொல்ல விடயதான அறிவு மற்றும் அதிகாரத்துடனான செயற்பாட்டு அரசியல் அனுபவம் இல்லாத நிலை, இதுவரை காலமும் நாட்டை சீரழித்த ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் செயற்பாட்டு முறைமை குறித்து தெளிவான அறிவில்லை என்பது அவரது கருத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது.


இவர் எவ்வாறு பிரதேச அபிவிருத்தி கூட்டங்களுக்கு தலைமை வகித்து அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பணியாற்றப் போகிறார் என்று எனக்கு விளங்கவில்லை. உள்ளூராடசி மன்றங்கள் என்பது அரசியல் ரீதியான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது சட்டம் இயற்றுகின்ற ஒரு நிறுவனம் அல்ல. உள்ளூராட்சி மன்ற இலக்குகளுக்கு வெளியே நின்று தான் இன்று அதிகமான வேட்பாளர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூராட்சி மன்றங்களுடைய இயக்கம் குறித்து தெளிவான சட்ட வரம்புகள் காணப்படுகிறது. (Legal Boundaries) அவைகளுக்குள்ளே நின்று தான் ஒரு உள்ளூராட்சி மன்றத் தின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இயங்க வேண்டும்.


ஒரு உள்ளூராட்சி மன்றம் மூன்று வகையான நிதிகளில் தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளும். கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் காலத்தின் காலம் அல்லது வருடா வருடம் ஒதுக்கப்படும் மாகாண கட்டுறுத்து நிதி (PSDG), அதைப்போலவே அலுவலக மற்றும் நிர்வாக விஸ்தரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய (CPG), இந்த இரண்டு நிதிகளும் தவிர பெரும்பாலும் ஒரு ஊராட்சி மன்றம் செயற்படுவது அதனுடைய சொந்த வருமானத்தில்தான். சோலை வரி உட்பட ஏனைய வரிகள் (உ+ம் ஆதனவரி), சேவைக்கட்டணங்கள், ஏல விற்பனைகள், தண்டப் பணங்கள், உள்ளூராட்சி மன்றத்தால் கொண்டு நடாத்தப்படும் வேறு வகையான தொழில் முயற்சிகள் இப்படி பல்வேறு வகையான வருமானங்கள் ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு காணப்படும்.


ஒரு திறமையான உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் என்பவர் வருமானத்தை அதிகரிக்க கூடிய விதத்தில் அந்த உள்ளூராட்சி மன்றத்தை நிர்வகிக்கும் திறன் காணப்பட்டால் மாத்திரம் தான் அவரால் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்ற நிர்வாக தலைவராக இயங்க முடியும். உலகத்தில் சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசங்களின் விடுதலை வேண்டி உள்ளூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கூடியவர்களாக அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுடைய நடவடிக்கை குறித்து பேசிக் கொண்டிருப்பவர்களாக அல்லது கட்சி அரசியல் குறித்து பிரஸ்தாபிப்பவர்களாக  அந்த தலைவர்களும் உறுப்பினர்களும் காணப்பட்டால் மக்களுடைய வரி பணத்தை அல்லது அந்த உள்ளூராட்சி மன்றத்தின் வருமானத்தை மிக மோசமாக பயன்படுத்திய ஒரு சபையாகத்தான் அந்த உள்ளூராட்சி மன்றம் அமையும்.


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் பொழுது தனது பிரதேசத்தின் வேட்பாளர்கள் நமது பிரதேச அபிவிருத்தியில் எப்படியான மாற்றங்களை செய்வதற்கு வந்திருக்கிறார்கள் அந்த மாற்றங்களை அவர்களால் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்புக்கு உள்ளே செய்ய முடியுமா என்பதை ஆழமாக நோக்கி வாக்களிக்க வேண்டும். அவ்வாறான சிறந்த வேட்பாளர்களை தான் அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலுக்கு நிறுத்த வேண்டும். இந்த இரண்டு விடயங்களில் எங்கு பிழை நடந்தாலும் ஒரு உள்ளூராட்சி மன்றம் திறமையாக செயல்பட முடியாது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுடைய கருத்தானது இலங்கையினுடைய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரான மோசமான ஒரு வன்முறைக் கருத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe