Ads Area

நிச்சயமாக இம்முறை மாம்பழச் சின்னம் சம்மாந்துறை பிரதேச சபையைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும்.

ஊழலற்ற மக்களாட்சியை எதிர்பார்க்கும் மக்களுக்கான சிறந்ததொரு ஆட்சியை செய்வதற்கான ஆணையை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னத்திற்கு வழங்கி சம்மாந்துறை பிரதேச சபையைத் தாருங்கள் என்று நாபீர் பெளண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.


மக்களை ஏமாற்றும் வங்குரோத்து அரசியலுக்கு முடிவுகட்டி நாகரீகமான பிரதேச ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்க சுயேட்சை குழு மாம்பழச் சின்னத்துக்கு சம்மாந்துறை மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றவர்களை நாம் தெரிவு செய்யவேண்டும். வெறும் பொய்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாறக்கூடாது என்றும் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார். 


உள்ளூராட்சி சபையின் ஆட்சி என்பது ஒரு குட்டி அரசாங்கம் போன்றது. இந்த குட்டி அரசாங்கத்திற்கு, கடந்த காலங்களில் சிறுபான்மை கட்சிகளுக்கு  சம்மாந்துறை மக்கள் ஆணை வழங்கியதனூடாக அடைந்த நன்மைகள் என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.


ஏமாற்று அரசியலை சம்மாந்துறை மண்ணில் விதைத்த சிறுபான்மைக் கட்சிகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை எமது மக்கள் புகட்டினார்கள். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு வாக்களித்ததினூடாகவும் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை சம்மாந்துறை மண்ணும் மக்களும் இப்போது உணர்ந்துள்ளார்கள். 


எனவே, புதிய மாற்றத்திற்காகவும், நாகரிகமான அரசியல் கட்டமைப்புக்காகவும், உழலற்ற மக்களுக்கான ஆட்சியும், வெளிநாட்டு உதவியைக் கொண்டு சுயேட்சை குழுவான மாம்பழ சின்னம் வழங்குமென்று அதற்கான ஆணையைத் தாருங்கள் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார். 


நிச்சயமாக இம்முறை மாம்பழச் சின்னம் சம்மாந்துறை பிரதேச சபையைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிச்சயம் மலரும் என்றும் பொறியியலாளர் கலாநிதி  உதுமான்கண்டு நாபீர் மேலும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe