மட்டக்களப்பு மாவட்டத்தை யாசகர்கள் அற்ற பிரதேசமாக மாற்றும் மகத்தான நோக்குடன் வீதிகளில் வசிப்போருக்கும் நீண்டகாலமாக மனநலப்பாதிப்பினால் வீடற்ற நிலையிலுள்ளவர்களுக்கும் நிரந்தரத்தீர்வுகளை வழங்கும் புதிய திட்டம் குறித்த முக்கிய கலந்துரையாடல் கடந்த 17.06.2025ம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
உதவி மாவட்டச்செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர்.முரளீஸ்வரன் வழிநடத்தியிருந்தார்.
வீடற்ற யாசகர்கள் மற்றும் உளநலப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் வழங்குவதுடன், அவர்களுக்குத்தேவையான மனநல சிகிச்சை, தொழில் பயிற்சிகளை வழங்கி சமூகத்தில் மீண்டும் இணைப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்துச் செயற்பட இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களால் பகிரப்பட்ட தகவலின்படி, தற்போது மட்டக்களப்பில் ஆகக் குறைந்தது 30 பயனாளிகளை உள்வாங்க வேண்டிய இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், பல்வேறு தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளனர்.
வீடற்றவர்களுக்குத் தற்காலிக மற்றும் பாதுகாப்பான உறைவிட வசதியை ஏற்படுத்த உதவும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திருப்பெரும்துறையிலுள்ள ஒரு கட்டிடத்தையும் அதற்கான பாதுகாப்பையும் இத்திட்டப் பயன்பாட்டிற்கு வழங்கச் சம்மதித்துள்ளார்.
மத்திய மற்றும் மாகாண சமூக சேவை திணைக்கள அதிகாரிகள், தங்களால் வழங்கப்படும் நிதிப்பங்களிப்பு உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதாகவும், அத்துடன், IMHO நிறுவனம் நிரந்தரக்கட்டிடம் மற்றும் உதவியாளர்களை நியமிப்பதற்கும் உதவுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் இத்திட்டத்துடன் தொடர்புடைய சட்டரீதியான விடயங்களைக் கையாள்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனைத்து விதமான சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதாகவும் ஆலோசிக்கப்பட்டது.
விபுலானந்தா வயோதிபர் காப்பகம் விமோச்சனா இல்லம், சூரியா பெண்கள் அமைப்பு, வுமன் இன் நீட் (Woman in Need) போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் வீடற்றவர்களுக்கான பராமரிப்பு, உணவு மற்றும் உடை போன்ற அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளனர்.
இச்செயற்றிட்டம் வெறும் தற்காலிக நிவாரணத்தை மட்டும் நோக்காகக் கொண்டிருக்கவில்லை. வீதிகளில் வசிப்பவர்கள் மற்றும் உளநலப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவது, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் அவர்களைச் சுயசார்புடையவர்களாக்கி, சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ வழிவகுப்பதே இத்திட்டத்தின் தொலைநோக்கு.
மட்டக்களப்பை யாசகர்கள் அற்ற ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம், அங்குள்ள சமூக நலன் மற்றும் மனித கண்ணியத்தை மேம்படுத்த இத்திட்டம் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.