Ads Area

இஸ்ரேல் மருத்துவமனையை நாங்கள் குறிவைக்கவில்லை, எங்களின் இலக்கு மருத்துவமனை அல்ல : ஈரான் விளக்கம்.

தெஹ்ரான்: ‘இஸ்ரேலின் ராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம். இஸ்ரேல் மருத்துவமனையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை’ ஈரான் விளக்கம் அளித்துள்ளது.


ஈரான் - இஸ்ரேல் மோதலின் 7-வது நாளான இன்று (ஜூன் 19) காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. 47 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல் அவிவ் நகரில் பங்குச் சந்தை கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், சொரோகா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் விளக்கம் அளித்துள்ளது.


ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், 


“இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் ராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே. அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன. அந்தப் பூங்காவுக்கு அருகே தான் சொரோகா மருத்துவமனை உள்ளது. நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் மருத்துவமனையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு மருத்துவமனை அல்ல” என்று தெரிவித்துள்ளது.


கமேனிக்கு பகிரங்க எச்சரிக்கை: 


சொரோகா மருத்துவமனை தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள இஸ்ரேல் எச்சரிக்கைகளை பதிவு செய்து வருகிறது. ஏற்கெனவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இருக்கவே கூடாது” என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா தலையிட்டால்.. - 


மருத்துவமனை தாக்குதல் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் அனைத்து விதமான வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.


“ஸயோனிஸ்டுகளிக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் ஈரான் தனது தேசிய நலனுக்காக, பாதுகாப்புக்காக, அடக்குமுறையை ஏவுபவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக சில உத்திகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். எங்கள் ராணுவ தாக்குதல் உத்தி பற்றி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ள அதிகாரிகள் அனைத்து சாத்தியக் கூறுகளையும் பிரயோகப்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள்” என்று ஈரான் வெளியுறவு இணை அமைச்சர் காசம் கரிபாபடி எச்சரித்துள்ளார்.


ஈரான் முழுவதும் இணைய சேவை முடக்கம்: 


இதனிடையே, ஈரானில் கடந்த 12 மணி நேரமாக இணைய சேவை பரவலாக முடங்கியுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு அமைப்பு நெட்ப்ளாக்ஸ் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. இணைய சேவை முடங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆனால், ஈரான் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் நலன் கருதியே இணைய சேவையில் சில கெடுபிடிகளைக் கையாள்கிறோம். இணைய சேவை இருந்தால் அதன் மூலம் எதிரிகள் இலக்குகளை கண்டறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதனால், அப்பாவி மக்களின் சொத்துகள் சேதமாகிறது, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனால் தான் இணைய சேவையில் கெடுபிடி கடைப்பிடிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe