பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மாஅதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை (28) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறையில் அமைந்துள்ள பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட பின்னர் சர்வமதப் பிரார்த்தனையுடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
அவரது பதவியேற்பு நிகழ்வில் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றிய சமூத்ரஜீவ பொலிஸ் சேவையிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றச்சென்றார்.
அவரது ஓய்வுக்குப் பின் அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மாஅதிபராக சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்க முன்னர் ஒன்பது பிரதிப் பொலிஸ்மாஅதிபர்கள் மற்றும் 16 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததுடன், இவ்விடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விடமாற்றங்களின்படி இதற்கு முன்னர் பதுளை மற்றும் மொனராகலை பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபராக இருந்த அவர் அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.