Ads Area

பாடசாலை மாணவி கர்ப்பம் : தாயார் கைதாகி பிணையில் விடுதலை - சந்தேக நபரைத்தேடும் பொலிஸார்.

 பாறுக் ஷிஹான்.


பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் கல்முனையிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையார் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள், சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


குறித்த முறைப்பாட்டிற்கமைய பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத பாதிக்கப்பட்ட மாணவி குறித்து பாடசாலை நிர்வாகம் அம்மாணவியின் தாயாரை வினவியதாகவும் உரிய பதிலின்மை காரணமாகவும் தாயார் கூறிய முரண்பாடான பதில்களில் சந்தேகம் காணப்பட்ட நிலையில் தற்போது மாணவியின் தந்தை குறித்த விடயமறிந்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.


குறித்த சம்பவத்திற்கு உடந்தையான மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் விவாகரத்து ஆகிய நிலையில் பிரிந்து வாழ்கின்றனர்.


குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான பாதிக்கபட்ட  குறித்த மாணவி அவரது தயாரின் தகாத தொடர்பிலிருந்த நபரினால் பாலியல் வல்லுறவிற்குட்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.


தற்போது இச்சம்பவத்துடன் தொடர்பான பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் கல்முனை தலைமையக பெண்கள், சிறுவர் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe