Ads Area

இழப்பீடு பெறத் தகுதியானவர்களின் பட்டியலையும் தேவையான தொகையையும் வெள்ளிக்கிழமைக்கு முன் அறிவிக்கவும் - ஜனாதிபதி பணிப்புரை.

பெரும்போகத்தில் பயிரிட அனுராதபுர விவசாயிகளை தயார்படுத்துங்கள்.


இழப்பீடு பெறத் தகுதியானவர்களின் பட்டியலையும் தேவையான  தொகையையும் வெள்ளிக்கிழமைக்கு முன் அறிவிக்கவும்.


பயிற்செய்கை நடவடிக்கைகளை உடனடியாக  தொடங்குவதே இழப்பீடு வழங்குவதன் முக்கிய நோக்கம்.

 

நீர்ப்பாசன கட்டமைப்பு  நிரந்தரமாக மீளமைக்கப்படும் வரை தற்காலிகமாக  நீர் விநியோகத்தை வழங்குக.


அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம்.


- அனுராதபுரத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.


வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில்  பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நன்கு ஒருங்கிணைந்த முறையில் அதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், தற்காலிக பழுதுபார்ப்புகளை மேற்கொண்டு தேவையான நீர்ப்பாசன நீர் விநியோகத்தை வழங்கவும் சம்பந்தப்பட்ட தரபபினருக்கு அறிவுறுத்தினார்.


பயிர்களுக்கு ஏற்பட்ட  சேதத்திற்கு இலங்கை  வரலாற்றில் மிக உயர்ந்த இழப்பீட்டை வழங்குவதன் ஊடாக பயிற்செய்கை நடவடிக்கைகளை விரைவில் மீண்டும் தொடங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை  மீளக் கட்டியெழுப்புவதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக இன்று (07) காலை அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


அனர்த்தத்தால் முழுமையாக சேதத்தை எதிர்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை, விவசாயக் காணிகளின் அளவு மற்றும் தேவையான நிதி என்பன குறித்த அறிக்கையை எதிர்வரும்  வெள்ளிக்கிழமைக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இந்த  இழப்பீட்டை   நியாயமாகக் கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதனை அநீதியான முறையில் யாரும் பெறக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.


விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டை நிச்சயமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும்  விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மீண்டும் பயிற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஜனாதிபதி தனித்தனியாகக் கேட்டறிந்தார்.


சேதமடைந்த வீதிகளை மீண்டும் திறப்பதற்கான திட்டம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு வீதி அபிவிருத்திக்கான  நிரந்தர திட்டங்கள் செயல்படுத்தப்படும் வரை தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.


மாவட்டத்தில் உள்ள 580 மின்மாற்றிகளில் 473 மின்மாற்றிகள் அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், தற்போது அவை சீரமைக்கப்பட்டு வருவதாகவும், நாளைய (08) தினத்திற்குள் மாவட்டத்தில் மின் விநியோகம்  முழுமையடையும்  என்றும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


மேலும், 49,000 நீர் விநியோகங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்  அவற்றில் சுமார் 99%  தற்பொழுது சீரமைக்கப்பட்டுள்ளதாவும், எஞ்சியவற்றுக்கு பவுசர்கள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 02 நாட்களுக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சேதமடைந்த சமூக நீர் வழங்கல் திட்டங்கள் தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகள் கடற்படையின் உதவியுடன் தற்போது நடைபெற்று வருகின்றன.  பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சமூகத்தின் பங்களிப்புடன் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


சோளம் மற்றும் ஏனைய பயிர்களுக்கான இழப்பீடு வழங்கி  பயிற்செய்கை நடவடிக்கைகளை  மீண்டும் தொடங்குவது, கால்நடை வளர்க்கும்  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மறுசீரமைத்தல், சுகாதார சேவைகளை மீளமைப்பது மற்றும் சேதமடைந்த மதஸ்தலங்களை  அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் 228 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அந்த வீடுகள் இருந்த இடங்களில் மக்கள் மீள்குடியேற்றுவதா அல்லது வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதா என்பது குறித்த துல்லியமான தரவுகளைப் பெற்று குறித்த காணிகளை  அடையாளம் காணும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


டிசம்பர் 16 ஆம் திகதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியுமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பாதிக்கப்பட்ட பாடசாலை  மாணவர்களுக்கு திறைசேரியால் வழங்கப்பட உள்ள 15,000 ரூபாவை  டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கவும், அதற்கான பட்டியலை உடனடியாகத் தயாரிக்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசு அதிகாரிகள், பொலிஸார்  மற்றும் முப்படையினரின் பங்களிப்பிற்கு குரித்து ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்தார்.


அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன, சேன நாணயக்கார,வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பிரதம செயலாளர் ஜே.எம்.ஆர்.பி. ஜயசிங்க , நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி  ஹர்ஷன சூரியப்பெரும, அநுராதபுரம் மாவட்ட செயலாளர் கே.ஜி.ஆர். விமலசூரிய மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-12-07





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe