அம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிழவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரியளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் அதனால் தங்களுக்கு நிவாரணம் தர வேண்டுமென்று மீனவர்கள் கோருகின்றனர்.
கல்முனை மற்றும் கல்முனைக்குடி, நிந்தவூர் கடற்கரைப் பள்ளிவாசல் பிரதேசத்தில் சுமார் 50 அடி முன்நோக்கி கடல் நகர்ந்துள்ளது. இதனால் கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொங்றீட் பாதை முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. மீனவர்களின் பொது ஓய்வு மண்டபமும், வேறு சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது.
அதேநேரம் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்திலும் மிகவும் மோசமான வகையில் கடலரிப்பு ஏற்பட்டு கடலும் முன்நோக்கி நகர்ந்துள்ளது. மீனவர்களின் வாடிகளும் சேதமடைந்துள்ளது. இதனால், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள உடல்கள் கடலிலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



