Ads Area

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.


அதற்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor)  இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது.


இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வழங்கும் விசேட இரவு விருந்து உபசாரத்திலும் ஜனாதிபதி இன்று (18) கலந்துகொள்ளவுள்ளார்.


செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரச தலைவர்கள் மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத்  மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (19) உரையாற்றவுள்ளார்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதுடன், மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள  பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே(Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-02-18




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe