சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை அல்-மர்ஜான் மு.ம.க தேசிய பாடசாலையானது 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்து, சம்மாந்துறை மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பெறுபேறுகளில் அபார வளர்ச்சி.
கடந்த 2024ஆம் ஆண்டை விட இவ்வருடத்தில் 12% அதிகரிப்பை ஏற்படுத்தி, பாடசாலையின் மொத்த சித்தி வீதமானது 88% மாக உயர்வடைந்துள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 52 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். மிக முக்கியமாக, பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவியும் மூன்று பாடங்களிலும் 'W' (தோல்வி) பெறவில்லை என்பது இம்முறை பெறுபேற்றின் சிறப்பம்சமாகும்.
தனித்துவமான சாதனைகள்.
தொழில்நுட்பப் பிரிவு: இப்பிரிவில் தோற்றிய மாணவி மாவட்ட மட்டத்தில் 4-ம் இடத்தைப் பெற்று, ஜனாதிபதி விருதுக்குத் தெரிவாகி பாடசாலைக்கு கௌரவத்தைத் தேடித்தந்துள்ளார்.
உயிரியல் பிரிவு: மாணவி ஒருவர் 3A சித்தி பெற்று மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ளமை ஏனைய மாணவிகளுக்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு.
இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டும் முகமாக, பாடசாலை அதிபர் M.I. மாஹிர் அவர்களின் தலைமையில் நேற்று (2026.04.06) பாடசாலை வளாகத்தில் விசேட பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து M.M. சித்தி பாத்திமா (DDE, EPSI), ACN. நிலோபரா (DDE, Planning) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவிகள் என பலரும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.
பாடசாலையின் இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், மாணவிகளின் வெற்றிக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், ஆசிரியர்கள், மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கு இதன்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.



