நூருல் ஹுதா உமர்.
சம்மாந்துறை பிரதேச புதிய வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த மாணவன் செல்வன் ரவிச்சந்திரன் பவதாருணன், இவ்வாண்டு வெளியான கல்விப் பொது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் துறைக்கு தெரிவாகி, தனது கிராமத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.
திரு. இரவிச்சந்திரன் – திருமதி. மனோகரி தம்பதிகளின் புதல்வனான இவர், அம்பாறை மாவட்டத்தில் 14ஆம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 840 ஆம் இடத்தையும் பெற்று சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் முதல் முறையாக பொறியியல் துறைக்கு தெரிவாகும் மாணவனாக அவர் விளங்குகிறார்.
இந்த சாதனை, கிராமத்தின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் அவர்கள், மாணவன் பவதாருணனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டியதுடன், பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து கௌரவித்தார்.
சாதனை குறித்து கருத்து தெரிவித்த மாணவன் பவதாருணன், “இரவு பகலாக நேரத்தை ஒதுக்கி கடின உழைப்புடன் கல்வியில் ஈடுபட்டதே இந்த வெற்றிக்கு காரணம். எனது பெற்றோர் மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் என்னை ஊக்குவித்து துணைநின்றனர். மேலும், சம்மாந்துறை வீரமுனை பகுதியைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மூத்தவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தனர்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னை கல்வி கற்றுக் கொடுத்த கல்முனை கர்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர், ஆசிரியர்கள், மற்றும் தனிப்பட்ட வகுப்பாசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.
புதிய வளத்தாப்பிட்டி மண்ணின் இந்த வரலாற்றுச் சாதனை, அப்பகுதி மக்களிடையே பெருமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

