அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் நேற்று (29.08.2026) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் முதலாவதாக சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாயீஸ் அரிசி ஆலை, சபா அரிசி ஆலை என்பவற்றில் இந்நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, நெல் கொள்வனவு தொடர்பான நடைமுறைகள் குறித்து சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் A. L. மஹ்ரூப், உதவி பிரதேச செயலாளர் B. பாசித் அஹமட், பிரதேச செயலகக் கணக்காளர் S. L. சர்தார் மிர்சா, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளருமான Y. B. M. நபாஸ், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M. T. M. மனாஸ், A. சாஜிதா, M. B. பஸ்மினா, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தித் தலைவர், அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவர்களின் விளைபொருளுக்கு உரிய நியாயமான விலையை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் எவ்விதத் தடையுமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதேச செயலாளர் இதன்போது அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், தகுதிவாய்ந்த தரமான நெல்லைக் கொண்டுவந்து அரசாங்கத்தின் இந்நன்மையைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



