சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் நுகர்வோர் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய இரு உணவகங்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.
நேற்றைய தினம் (05.08.2026) சம்மாந்துறை பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்திடீர் சோதனையின் போது, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத இரண்டு உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. அங்கு காணப்பட்ட பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதுடன், நுகர்வோர் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (06.08.2026) குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட இரு நபர்களுக்கும் முறையே ரூபா 5,000/= மற்றும் ரூபா 10,000/= அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இதில் தொடர்புடைய ஒரு கடைக்கு கௌரவ நீதவான் அவர்கள் கடுமையான நிபந்தனையுடன்கூடிய விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி:
குறித்த உணவகம் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளையும் முழுமையாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் குறித்த கடை உடனடியாக மூடி முத்திரையிடப்படும்.
உதவி சுகாதார மருத்துவ அதிகாரி (AMOH) அவர்களின் மேற்பார்வையில், சம்மாந்துறை பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் (PHII) அனைவரும் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களுக்கு எதிரான இத்தகைய சட்டரீதியான அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



