பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நாடு முழுவதும் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களை மையமாகக் கொண்டு செப்டம்பர் 14 முதல் 19 வரை அனுஷ்டிக்கப்பட்ட "உள்ளூராட்சி வாரம்" நேற்றுடன் (19) நிறைவுக்கு வந்தது.
இதன் இறுதி நாளான நேற்று சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் விசேட நிறைவு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் 10 ஆண்டுகளாகக் கடமையாற்றி, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்தும் சேவையாற்றிவரும் பிரதேச செயலாளரின் நீண்ட காலப் பணியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இப்பகுதி மக்களின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகச் சேவைகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டுவரும் பிரதேச செயலாளருக்கு, பிரதேச சபைச் செயலாளரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன. இதில், உள்ளூராட்சி வாரத்தில் இடம்பெற்ற விறுவிறுப்பான கரைப்பந்தாட்டப் (Volleyball) போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தைத் தமதாக்கிக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக அணிக்குரிய வெற்றிக் கிண்ணமும், பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உதவித் தவிசாளர் வீ. வினோக்காந்த், பிரதேச சபைச் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலக மற்றும் சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




