Ads Area

சம்மாந்துறை வீரமுனை வட்டார S24 கால்வாய் ஓரங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டது ஏன்?”

16ஆம் திகதி இடம்பெற்ற மரங்கள் அகற்றும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறார் வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விகான்.


(தில்சாத் பர்வீஸ் (சம்மாந்துறை நிருபர் )


சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விகான், உடங்கா 1 மற்றும் 2 கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட அம்பாறை 14 வீதியில் அமைந்துள்ள S24 கால்வாயில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மரங்கள் அகற்றும் நடவடிக்கைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் காணப்படும் குறித்த கால்வாய் நீண்டகாலமாக முறையாக துப்பரவு செய்யப்படாத நிலையில், பிரதேச சபை அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக கடந்த 9ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையும் நீர்ப்பாசனத் திணைக்களமும் இணைந்து கால்வாயை துப்பரவு செய்ததாக றிஸ்விகான் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், குறித்த துப்பரவு நடவடிக்கை நிறைவடைந்து ஒரு வாரத்துக்குள், கடந்த 16ஆம் திகதி மீண்டும் அப்பகுதியில் காணப்பட்ட மரங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்ட மரங்கள் மற்றும் கிளைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் கால்வாய் பகுதியில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


16ஆம் திகதி இடம்பெற்ற நடவடிக்கையின்போது தான் சம்பவ இடத்தில் இருக்கவில்லை எனத் தெரிவித்த றிஸ்விகான், பின்னர் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நீர்ப்பாசன உத்தியோகத்தரைத் தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் விளக்கம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.


தமக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலேயே மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், பணியின்போது அங்கிருந்த சில பொதுமக்கள் மற்றும் மற்றொரு பிரதேச சபை உறுப்பினரின் தலையீடு காரணமாக பணியைத் தொடர முடியாமல் நிறுத்தியதாகவும் குறித்த உத்தியோகத்தர் தெரிவித்ததாக றிஸ்விகான் கூறியுள்ளார்.


“செப்டெம்பர் 9ஆம் திகதி முறையாகத் துப்பரவு செய்யப்பட்ட கால்வாயில், ஒரு வாரத்திற்குள் மீண்டும் மரங்களை அகற்ற வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பது எனக்குத் தெளிவில்லை” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


அத்துடன், 16ஆம் திகதி இடம்பெற்ற மரங்கள் அகற்றும் நடவடிக்கை தனது முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டதாகவும், பிரதேச சபைத் தவிசாளரின் அறிவுறுத்தலின் பேரில் தான் அதனை முன்னெடுத்ததாகவும் தன்னைப் பற்றித் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனால், சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் தன்னிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், உண்மையான நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்திற்காகவும் மேற்கொண்டு குறித்த சம்பவத்திற்கு நடவடிக்கைக்காகவும் இந்த விளக்கத்தை வழங்குவதாகவும் றிஸ்விகான் குறிப்பிட்டுள்ளார்.


“2026.09.16 அன்று இடம்பெற்ற மரங்கள் அகற்றும் நடவடிக்கைக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுக்கான சில ஆதாரங்களும் என்னிடம் உள்ளன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தற்போது மழைக்காலம் என்பதால் S24 கால்வாய் ஊடாக அதிகளவு நீர் பாய்ந்து செல்வதாகவும், அகற்றப்பட்ட மரங்கள் மற்றும் கிளைகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுவதால் அவை நீரோட்டத்துக்கு தடையாக அமையும் அபாயம் உள்ளதாகவும் றிஸ்விகான் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறித்த பகுதியிலுள்ள வீதி “I-Road” திட்டத்துடன் தொடர்புடையதாகவும், அதன் புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், கால்வாயில் நீரோட்டம் தடைப்பட்டு நீர் தேங்கினால் வீதிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனவே, கால்வாயில் விடப்பட்டுள்ள மரங்கள் மற்றும் ஏனைய தடைகளை உடனடியாக அகற்றி, மழைக்காலத்தில் நீரோட்டம் தடையின்றி இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என றிஸ்விகான் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, நீர்ப்பாசன அமைச்சர், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், “Clean Sri Lanka” திட்டத்தின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


“கால்வாய் துப்பரவு செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் நீரோட்டத்தை சீராகப் பேணுவதும், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதுமாகும். எனவே, தற்போது கால்வாயில் காணப்படும் தடைகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்” என றிஸ்விகான் மேலும் தெரிவித்துள்ளார். 







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe