நான்தான் தொடர்ந்தும் பிரதமராக இருக்கின்றேன் என்றும், ஜனாதிபதியினால் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் மஹிந்தவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் கூறித்தான் பிரதமர் மாளிகையான அலரிமாளிகையில் ரணில் அவர்கள் குடியிருந்து வருகின்றார்.
அதேநேரம் தான்தான் பிரதமர் என்று கூறிக்கொண்டுதான் 02/11/2018 அன்று பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என்று சபாநாயகருக்கு கடிதமும் எழுதியுள்ளார். அப்படிப்பார்த்தால் அவருடைய நிலைப்பாட்டின் பிரகாரம் இன்றும் அவரே பிரதமர் என்று அர்த்தமாகின்றது. அதனால்தான் இன்றும் பாராளுமன்றத்துக்கு அலரிமாளிகையில் இருந்துதான் வந்தார், திரும்பவும் அங்கேதான் சென்றுமுள்ளார்.
அப்படியென்றால்... தான்தான் பிரதமர் என்று கூறிக்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் அவர்கள் புதிய பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தது மட்டுமல்ல, புதிய பிரதமர் இதன் மூலம் பதவியிழக்கின்றார் என்றும் கூறியுள்ளார். அப்படியென்றால் மஹிந்த பிரதமர் என்பதை ஏற்றுக்கொண்டதன் பின்புதானே அவருக்கு எதிராக வாக்களித்தார் என்பது ஊர்ஜிதமாகின்றது அல்லவா?
தான் பிரதமராக ஏற்றுக் கொள்ளாத ஒருவருக்கு எதிராக எப்படி வாக்களிக்க முடியும்? அதேநேரம் மஹந்த ராஜபக்ச பிரதமராக இருந்தால்தானே பதவியை இழக்கமுடியும்?
பதவியே இல்லாதவர் எப்படி பதவியை இழக்க முடியும்? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில்.
இன்று பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்து அவருடைய பிரதமர் பதவியை மதிப்பிழக்கச் செய்துள்ளோம் என்று கூறினால், தற்போது மஹிந்தவும் பிரதமரில்லை ரணிலும் பிரதமரில்லை என்ற நிலைப்பாட்டுக்குத்தானே நாம் வரமுடியும். அப்படியென்றால் ரணில் எப்படி அலரிமாளிகையில் குடியிருக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. ஆகவே இந்த செயல்பாடானது சட்டத்துக்கு முரணானது என்பதே எங்களின் கருத்தாகும்.
ஆகவே சட்டம் என்ன செய்யப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..!
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை