Ads Area

இலங்கையில் ஏற்பட்ட மறைமுக இரானுவப் புரட்சி.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

இலங்கையில் ஏற்பட்ட மறைமுக இரானுவப் புரட்சியும், சிங்கள மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்.   

இராணுவப்புரட்சி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பாகிஸ்தான், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளாகும்.

இராணுவ தளபதிகளாக இருப்பவர்கள், ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அரச தலைவராக முடிசூடிக்கொள்வார்கள். இவ்வாறான புரட்சிகள் மூலம் அரசியல் யாப்புக்கள் அங்கே மதிக்கப்படுவதில்லை.

அதுபோல் எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் கட்டளையிடும் தளபதியாகவும் இருக்கின்ற மைத்ரி அவர்கள், ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு தனது சகாவும், முன்னாள் ஆட்சியாளருமான மகிந்தவிடம் ஆட்சிப்பொறுப்பை வழங்கியுள்ளார்.

இந்த ஆட்சி கவிழ்ப்பில் நேரடியாக இராணுவம் தலையிடாவிட்டாலும், முப்படைகளின் தளபதி தலையீடு செய்ததன் மூலமும், ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்பு தலைநகரின் கேந்திர நிலையங்களில் இராணுவம் பாதுகாப்புப்பணியில் அமர்த்தப்பட்டதன் மூலமும் இதனை ஓர் மறைமுக இராணுவ புரட்சி என்று கூற முடியும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்ததானது, அவரை இந்த நாட்டு மக்கள் ஐந்து வருடங்களுக்கு நிராகரித்துவிட்டார்கள் என்பதே அதன் பொருளாகும்.

மகிந்தவும் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு தேர்தல் பெறுபேறுகள் வெளியாகுமுன்பே அலறி மாளிகையை விட்டு அதிகாலையிலேயே மிகவும் கவுரவமாக வெளியேறினார்.

ஐ.தே. கட்சியின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி பதவியில் அமர்வதற்கு மைத்ரிக்கு மக்கள் ஆணை வழங்கியதுபோல், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சி செய்வதற்காக ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள்.  

இந்த ஆணை முடிவடையாத நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியதன் மூலம், ஐ.தே.க தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு செய்ததானது, மக்களின் ஆணை உதாசீனம் செய்யப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது.   

ஓர் ஜனநாயக நாடு என்ற வகையில் அரசாங்கத்தை மாற்றுவதென்றால் முதலில் அவர்கள்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வெளிப்படைத்தன்மை பேனப்பட்டிருக்கும்.

ஆனால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் முதலில் முன்வைக்காமல், திடீரென சத்தமின்றி புதிய பிரதமரை நியமித்ததன் பின்பே குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், பதவி நீக்கியுள்ளதாக பிரதமருக்கு அறிவித்திருந்தார்கள்.  

முப்படைகளுக்கும் கட்டளையிடுதல் மற்றும் சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை கொலை செய்ய பிரதமரும், அவரது சகாக்களும் சதித்திட்டம் தீட்டினார்கள் என்றால், அதற்கென ஓர் விசாரணை ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்திருக்கலாம்.    

அல்லது அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற ஜனநாயக நாடு என்றவகையில் வேறு ஏதாவது சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.   

மறுபுறத்தில், ரணில் தலைமையிலான அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல் செய்தார்கள் என்றால், கடந்த மகிந்தவின் ஆட்சியில் யாரும் ஊழல் செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது.  

இலங்கையை ஆட்சி செய்த எந்தவொரு ஜனாதிபதியும் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை. ஆனால் மகிந்த தலைமையிலான அரசாங்கம்தான் யுத்தத்தை வெற்றிகொண்டது என்ற கவுரவமும், வரலாற்று பெருமையும் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளது.

ஆனால் இந்த நாட்டின் கவுரவ பிரஜையாக எல்லோராலும் மதிக்கப்பட வேண்டிய மகிந்த ராஜபக்ச அவர்கள், அரசியலமைப்புக்கு விரோதமாக செயல்ப்பட்டு குறுக்கு வழியில் சென்று ஆட்சியை கைப்பேற்றியதானது அவருக்கிருந்த மரியாதையை குறைத்துள்ளது.

இதனால் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த அமோக அபிமானத்தில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன், சிங்கள மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது.  
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe