மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுத்தால் என்ன நிலமை ஏற்படும் என புளோட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் நாளை மறுதினம் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.சிலர் நடுநிலை வகிக்குமாறு கூறுகின்ற போதிலும் அவ்வாறு நடுநிலை வகிப்பதானது மகிந்த ராஜபக்ஸவை ஆதரிப்பதற்கு சமமாகவே பார்க்கப்படுகின்றது.தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஸவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினை தெரிவித்தோம்.நாங்கள் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தினை ஆரம்பிக்க முயற்சித்தால் அது ஒரு அழிவு நிலைக்கே எங்களை கொண்டு செல்லும். இன்று இராணுவத்தில், அரசாங்கத்தில் உள்ள உளவுப்பிரிவுடன் பல பெருமளவு தமிழ் இளைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
அதனால் ஆரம்பத்திலேயே இவ்வாறானவர்கள் கிள்ளப்பட்டுவிடுவார்கள். எங்களிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. நாங்கள் அனைத்தையும் கையளித்துவிட்டோம்.அது அரசாங்கத்திற்கும் தெரியும். ஆயுதப்போராட்டங்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அவ்வாறான எண்ணமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.