தொழில் முயற்சியாளர்களுக்கான நாடு, மக்களை வலுப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பை முக்கிய இலக்குகளாக கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (05) பிற்பகல் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் தொழில் முயற்சிகள் மற்றும் மனித வளத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறிய மக்களுக்கு சலுகைகளை வழங்கும் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வரவுசெலவுத் திட்டத்திற்கு அமைய இந்த வருடத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4,550 பில்லியன் ரூபாவாகும்.
அரசாங்கத்தின் வருமானமாக 2,400 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை நிகர தேசிய உற்பத்தியில் சுமார் 4.5 வீதமாகும்.
இந்த இலக்கை நோக்கி அரசாங்கம் பயணிப்பதாகவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் மார்ச் மாதம் ஆறாம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் மாதம் 13 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மாலை வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.