இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
நவீன வாழ்க்கை முறையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எளிதாக உள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரத்தை நாம் கடந்துவிடுகிறோம். ஆனால் நவீன வாழ்க்கை முறை மறைமுகமாக நமது உடலுக்கு ஊறுவிளைவித்து பல நோய்கள் வருவதற்கு அடித்தளமாகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசு, சாயப்பட்டறை கழிவுகள் தண்ணீரில் கலப்பது, வாகனப் புகை அதிகம் காற்றில் கலப்பது போன்றவற்றால் ஆண்களுக்கு உணர்வுகள், உணர்ச்சிகள் குறைந்துள்ளது. சமீப கால ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவர நிலவரப்படி, சில நகரங்களில் ஆண் மலட்டுத்தன்மை அதிகமாகியுள்ளது.
முறையான எளிய உடற்பயிற்சி இன்று இல்லை. அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்கு கூட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். உடல் உழைப்பே இல்லாமல் குளிர் சாதன அறைகளில் வேலை செய்யும் சூழல், பெண்களுக்கு வீட்டு வேலை சுலபமாகிவிட்டது. மொத்தத்தில் யாருக்குமே இன்றைய வாழ்க்கை முறையில் சீரான உடற்பயிற்சி இல்லை.
அப்படி இல்லாமல் தினசரி உடற்பயிற்சி என்பதை முறைபடுத்தினால், இதுபோன்ற பிரச்சினைகள் வராது. பெரும்பாலான குழந்தையின்மை தம்பதியினருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால் பெண்களுக்கு கருத்தரித்தலில் தேக்க நிலை ஏற்படுகிறது. முறையான திட்டமிடல், முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும்.
அதுபோல ஆண்களுக்கு இருக்கும் புகை, மது மற்றும் போதை பழக்கத்தால் அதிக அளவில் ஆண்மைக்குறைவு மற்றும் விந்தணு உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அதிக கதிர்வீச்சு உள்ள தளங்களில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் லேப்டாப், கணிப்பொறி போன்றவற்றை பயன்படுத்துவர்களுக்கும் விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. தற்போது அதிக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
டாக்டர் டி.செந்தாமரைச்செல்வி