Ads Area

முஸ்லிம் அரசியல்வாதிகள் சண்டைக்காரனின் காலில் விழுவதைத் தவிர வேறு வழியில்லையா ..?

Masihudeen Inamullah

சண்டைக்காரனின் காலில் விழுவதைத் தவிர மார்க்கம் இல்லையா..?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இருபெரும் கூட்டணிகள் அமையும் சாத்தியப் பாடுகளே காணப்படுகின்றன, இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுசன முன்னணி ஒரு அணியாகவும், ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி ஒரு அணியாகவும் இரு பிரதான அணிகள் இருக்கலாம்!

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை தீவிரப்படுத்தி பெருந்தேசியவாத சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை முதன்மைப் படுத்தும் பொது எதிரணியின் நெருக்குவரங்களால் ஐக்கிய தேசியக் கட்சியில் சரணடைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் அந்தக் கூட்டணியில் தொடர்ந்து இருக்கின்ற சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதனால் முஸ்லிம்கள் பேரம் பேசும் வலிமையை இழந்துள்ளனர்!

இந்த நிலையில் தான் முஸ்லிம் அரசியலின் தாயகம் கல்முனையின் பக்கம் கூட்டு எதிரணியின் கவனம் குவிந்துள்ளது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது குறித்த சர்ச்சை தற்பொழுது கிளப்பப்பட்டுள்ளது!

ஏற்கனவே அமைச்சர் ரிஷாத் தரப்பினர் மீது பாரிய நெருக்குவாரங்களை முடுக்கிவிட்டுள்ள பொது எதிரணியினர் தற்பொழுது ஹகீம் தலைமையிலான காங்கிரஸ் காரர்களை கல்முனை விவகாரத்தில் பணயம் வைக்க முயற்சிக்கிறார்கள்!

கண்டியில் ரதன தேரர் ஞாசார தேரார் ஆகியோரை கொண்டு அரங்கேற்றிய நாடகம் போன்று மற்றுமொரு நாடகம் இன்று கல்முனையில் அரங்கேற்றப் பட்டுள்ளது, முஸ்லிம் அமைச்சர்களை அரசிலிருந்து வெளியே இழுத்துப் போட்டது போன்று, கிழக்கு முஸ்லிம்களையும் பலவந்தமாக இழுத்து சண்டைக் காரனின் காலில் விழ வைக்கும் முயற்சி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.

ஏற்கனேவே சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்துள்ள முஸ்லிம்களுக்கு தமது தலைவர்கள் தங்கிப் பிடித்துள்ள ஐக்கிய தேசிக கட்சியின் ஆட்சியிலும் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் சமய கலாசார பண்பாட்டு உரிமைகளுக்கும் உத்தரவில்லாமல் போயுள்ள நிலையில் ஒரு பலமான ஆட்சியின் கீழாவது நிம்மதிப் பெருமூச்சு விட முடியுமா என மாற்றி யோசிக்கும் ஒரு நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது!

முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுதான், சுதந்திரக் கட்சியும் ஒன்றுதான், பொதுசன முன்னணி ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தீமைகளில் குறைந்த தீமையை, சண்டைக் காரனுடன் சமரசம் செய்வதா என்ற திரிசங்கு நிலையில் இருக்கின்றனர்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது..?

குறைந்த பட்சம் ஹக்கீம் ரிஷாத் இரு அணியினரும் இணைந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தமது தரப்பு சுதந்திரமாகவே செயற்படும் என்றும் தமது ஆதரவை எந்த அணிக்கு வழங்குவது என்ற செய்தியை இரு அணிகளுடனும் கோரிக்கைகளை பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னரே தமது சுயாதீனமான நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பிரகடனம் செய்தல் வேண்டும்!

அவ்வாறு செய்வதன் மூலம் பொது எதிரணியின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை தணிக்கவும், இவர்களுக்கு என்னைவிட்டால் வேறு மார்க்கம் இல்லை என்ற பிரதமரின் நிலைப்பாட்டை தளர்த்தவும் முடியும் என நம்புகிறேன்!

முஸ்லிம்களை பணயம் வைத்து பலிக்கடாவாக்கி மேற்படி மூன்று தரப்பினருமே தேர்தல் அரசியல் செய்கின்றனர்! அரசியலும் இராஜ தந்திரமும் இந்த சமூகம் பறிகொடுத்துப் பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்!
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe