கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மனதை நெகிழச் செய்து வரும் நீதிபதி இளஞ்செழியன்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெய்ப்பாதுகாவலர் இருவர் காயமடைந்தனர்.
அப்போது, அந்த இடத்தில் நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். இத்துப்பாக்கி சூட்டின்போது நீதிபதியின் மெய்பாதுகாவலராக 15 ஆண்டுகளாக கடமையாற்றிய சரத் ஹேமசந்தர மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தனது உயிரை அருகிலிருந்து பாதுகாத்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்ட இளஞ்செழியன், இன்று முதல் எனக்கு இரண்டு பிள்ளைகள் அல்ல, நான்கு பிள்ளைகள் உள்ளார்கள் என்றும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து நான் கவனித்துக்கொள்வேன் என்று இறுதிக்கிரியை முடிந்தவுடன் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த தமது பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளையும் தமது வாழ்நாள் முழுவதும் ஆதரிப்பதாக உறுதியளிப்பதாகவும் நீதிபதி இளஞ்செழியன் வாக்குறுதி கொடுத்திருந்தார். கொடுத்த வாக்குறுதிக்கு அமைய, பிள்ளைகளின் படிப்புச் செலவினை ஏற்றதோடு அவர்களின் வீட்டினையும் திருத்தியமைத்து கொடுத்தார். அதுமாத்திரமன்றி ஒவ்வொரு மாதமும் பிள்ளைகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் மனிதாபிமானச் செயலை தென்னிலங்கை பெரும்பான்மை தரப்பினர் பாராட்டி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியில் கொஞ்சம் கூட பிழையின்றி செய்துவரும் நீதிபதி இளஞ்செழியன் தொடர்பான நன்மதிப்பு மேலும் மேலும் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்துவருகிறது. அவர் வழங்கும் நீதியான தீர்ப்பினைப் போல.