Ads Area

முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன்!!

உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.


முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக்னேஸ்வரன் ஐயா தமிழ் சமூகத்துக்கு விடுத்து உள்ள விண்ணப்பத்தை பத்திரிகையில் நான் படித்தேன். இது அப்பட்டமாக இனவாதத்தின் உச்சத்தை தொட்டுள்ள கருத்து நிலைப்பாடு ஆகும்.

ஏனென்றால் எவருக்கும் எங்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்துவது அழகோ, முறையோ அல்ல. அரசியலை, அழுத்தத்தை, வன்முறையை பிரயோகித்து காணிகள் எந்த தரப்பினராலும், எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, கையகப்படுத்தப்படவோ கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் உடுத்த உடுப்போடு 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட வரலாற்று துயரத்தில் இருந்து நாம் இன்னும் மீண்டு விடவில்லை.

இந்நிலையில் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை மீண்டும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. அத்துடன் இவ்வாறான கருத்துகள் தமிழ் பேசும் மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பனவாக உள்ளன. அரசியல் பிழைப்புகளுக்காக முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்துகளால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதே காலம் காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் நீடித்த சக வாழ்வுக்கு சங்கடம் கொடுப்பதாகவும் உள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe