நூருல் ஹுதா உமர்
ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது என கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜெமீல் முகம்மட் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள் ஆகியன இணைந்து சாய்ந்தமருதில் நடாத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பிலான சந்திப்பில் கலந்துகொண்டு மீனவர்கள் மத்தியில் பேசிய அவர்,
மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போவதாகவும் 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருவதாகவும். மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதாகவும் அங்கு மீனவர்கள் கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜெமீல் முகம்மட்டிடம் முறையிட்டனர்.