(ச.சஞ்சீவ்)
மல்வத்தை ஆரம்ப வைத்தியப் பிரிவு 23 வருடமாக தரமுயர்த்தப்படாமையினால் பிரதேச மக்கள் அவதி.
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மல்வத்தை கால காலமாக எல்லா வகையிலும் கவனிப்பார் அற்ற கிராமமாகவே காணப்படுகின்றது. இம் மல்வத்தைக் கிராமத்தைச் சூழ புதுநகரம், கணபதிபுரம், தம்பிநாயகபுரம், திருவள்ளுவர்புரம், மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, ஹிஜிராபுரம், மஜீட்புரம், 26ஆம் காலனி போன்ற 10 கிராமங்களைக் கொண்டது. இங்கு மூவின மக்களும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களின் வைத்தியச் தேவையைப் பூர்த்திசெய்ய ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப வைத்தியப் பிரிவு 23 வருடங்களைக் கடந்தும் எந்தவித தரவுயர்வும் இல்லாமல் அதே நிலையில் இருப்பது மிகவும் வேதனையான விடையமாகும்.
சுமார் 8000 இற்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழும் மல்வத்தை உட்பட சுற்றவரையுள்ள கிராமங்களின் மிகவும் அத்தியாவசிய தேவையாகிய இந்த வைத்தியசாலையை “C” தர பிரதேச வைத்தியசாலையாக மாற்றி ஒரு நிரந்தர வைத்தியரும் தாதியும் தங்கி இருந்து சேவை செய்யக்கூடிய வகையில் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகக் காணப்படுகின்றது.
அண்மையில் ஆரம்ப மருந்துப் பராமரிப்பு நிலையமாக இருந்த வான்எல கிராம வைத்தியசாலை “C” தர வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து இந்த வைத்தியசாலையை தரமுயர்த்தி மக்களின் அத்தியாவசிய தேவையை நிவர்த்தி செய்ய சுகாதார சேவை அமைச்சு மற்றும் அதிகாரிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.