Ads Area

கொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்கள் கடத்தியவர்கள் அதிரடியாக கைது.

(பாறுக் ஷிஹான்)

கொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்களை தொடர்ச்சியாக கடித உறையில் கடத்தியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

அண்மையில் (14) தனியார் கொரியர் சேவை ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கடித உறைகளில் கடத்தப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அம்பாறை புறநகர் பகுதி ஒன்றில் மதுவரி அத்தியட்சகர் மற்றும் அம்பாறை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் இணைந்து 4 சந்தேக நபர்களை போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.

இதன் போது இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வர் மற்றும் பிறிதொரு கஞ்சாவினை தம் வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு 43 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரையும் கடந்த புதன்கிழமை (15) அம்பாறை நீதிமன்ற நீதிவான் ஹன்சதேவ சாமர திவாகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை அனைத்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் மதுவரி அத்தியட்சகர் தலைமையில் கைதானவர்களின் வலைப்பின்னல் தொடர்பிலான புலனாய்வு முடக்கிவிடப்பட்டிருந்தது.

இதற்கமைய தனியார் கொரியர் சேவை ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த நூதனமான கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் அம்பாறை கிளையின் சந்தேக நபரான அதன் முகாமையாளர் மற்றும் விநியோக வேலையாள் என இருவர் கைதாகி இருந்தனர். அத்துடன் இவர்களின் வாக்குமூலத்திற்கமைய இச்சேவையின் கொழும்பு பிரதான நிலைய அதிகாரிகளையும் எதிர்வரும் நாட்களில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக குறித்த தனியார் கொரியர் சேவை ஊடாக கடத்தப்படும் போதைப்பொருட்களை பொறுப்பேற்று பெற வந்தவர்கள் என சந்தேகத்தின் பெயரில் இருவரும் கைதாகியுள்ளனர். இதனுடன் தொடர்புபட்டவர்களை நீதிமன்ற உதவியுடன் பிடியாணை மூலம் கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

இவர்களில் முகாமையாளர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் 20, 21, 23 வயதினை உடையவர்கள் எனவும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

மேற்படி சம்பவங்களில் கைதானவர்கள் தொடர்பில் மேலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe