ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசாி )
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு முக்கிய அரசியல்வாதி இருந்தார். அவரது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து 'அவர் வெற்றி பெற்று விடுவார்' என்று பரவலாக கட்டியம் கூறுவார்கள்.
குறிப்பிட்ட அரசியல்வாதியும் பல தேர்தல்களில் இவ்வாறான கூட்டத்தை நம்பியிருந்தார். இத்தனை ஆயிரம் வாக்குகள் நிச்சயம் கிடைக்குமென்றார். ஆனால் கடைசி வரையும் அவர் மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பிரதிநிதித்துவ அரசியலுக்கு தெரிவு செய்யப்படாமலேயே போனார்.
உண்மையிலேயே முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய பல அரசியல் ஆளுமைகளை மக்கள் ஏனோ ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது இறைவன் அவர்களது தலைவிதியை அவ்விதம் எழுதவில்லை.
இதேவேளை, எத்தனையோ பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவு இருப்பதான ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருந்த எத்தனையோ அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமலேயே மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். ஆனால், 'இவர் வெல்லவே கூடாது' என சமூக ஆர்வலர்கள் நினைத்த சிலர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இன்னும் பலர் வெற்றி பெற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே அரசியலில் இருந்தஇடம் தெரியாமல் ஆக்கப்பட்ட சரித்திரங்களும் உள்ளன.
இதுதான் நிலைமை என்ன செய்ய!
முஸ்லிம் அரசியலின் போக்கும், இந்த சமூகத்தின் மனவோட்டமும் அவ்வாறுதான் இருக்கின்றது. அதைப் புரிந்தவர்களுக்கு இதனையும் புரிந்து கொள்வது கடினமன்று. நீண்டகாலம் பாவிக்காத போலி சீனத் தயாரிப்புக்கள் என்று தெரிந்து கொண்டே உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்கின்ற ஒரு வாடிக்கையாளனைப் போல, 'பொருத்தமற்றவர்கள்' என்று தெரிந்து கொண்டே அரசியல்வாதிகள் பலருக்கு வாக்களிக்கின்ற தன்மையும் மக்களிடையே ஒரு நச்சுவட்டம் போல தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இந்த யதார்த்தத்தை ஒவ்வொரு முஸ்லிம் தலைமையும் வேட்பாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விடயத்தை கூறுகின்றேன். சனக் கூட்டத்தைப் பார்த்து, கூட்டத்தில் கலந்து கொள்கின்ற நூற்றுக்கணக்கான அல்லது சில ஆயிரம் பொது மக்களை வைத்துக் கொண்டு மாத்திரம் நாம், நமது கட்சி, நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவோம் என நம்பியிருக்கக் கூடாது என்பதே இதனைச் சுட்டிக்காட்டுவதற்கான காரணமாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்போம் என்று வாக்குறுதியளித்த மக்களில் எத்தனையோ பேர் கடைசி நேரத்தில் ஏதோவொரு காரணத்திற்காக தமது முடிவை மாற்றியமைத்திருக்கின்றார்கள்.
இதனால், தமக்கு ஆயிரக்கணக்கான வாக்குகள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்த சில அரசியல்வாதிகள் ஏமாந்திருக்கின்றார்கள். வாக்குறுதியளித்து ஏமாற்றுபவர்களாக அநேக முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதால் மக்களை குறைகாணவும் அவர்களுக்கு அருகதையில்லாமல் போயிருக்கின்றது.
கடந்தகால அனுபவம்
எனவே, கடந்த காலங்களில் தேர்தல் மேடைப் பேச்சுக்களைக் காண்பதற்காக வந்த மக்களை அடிப்படையாகக் கொண்டு தாம் வெற்றிபெறுவோம் என்று நம்பியிருந்தது போல, யாரும் எந்தக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளரும் இம்முறை சனத்திரளை நம்பியோ அல்லது சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களின் ஆதரவுக் கருத்துக்களின் அடிப்படையிலோ தாம் வெற்றி பெற்று விடுவோம் என்று கண்மூடித்தனமாக நம்பியிருக்கக் கூடாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
தேர்தல் பிரசாரத்திற்கு வரும் மக்கள் அலையை வைத்து வாக்களிப்பை தீர்மானிக்க முடியுமென்றிருந்தால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றிருக்க வேண்டும். 2010 இல் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2015 இல் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த மாயைகளுக்குப் பின்னால் போகாமல், நிஜமாகவே களத்தில் இறங்கி 'தீயாய் வேலை செய்ய' வேண்டியுள்ளது.
ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்குச் சார்பாக முகநூலில் எழுதுகின்றவர்கள் அடுத்தவாரம் வேறு ஒரு அரசியல்வாதிக்காக செம்புதூக்குவார்கள். இன்று நம்முடன் நிற்கின்ற சில கட்சி முக்கியஸ்தர்கள் இன்றிரவே வேறு கட்சிக்கு தாவலாம்.
உண்மையில், வாக்காளர்களில் கணிசமானவர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள். எனவே அவர்களைச் சென்று சந்திக்க வேண்டும். இவர்களில் பலருக்கு யார் எந்தக் கட்சியில் கேட்கி;ன்றார்கள் என்ற விடயம் கூட தெரியாதுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன், தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்ற விளக்கமும் அவர்களுக்கு இம்முறை சரியாக அளிக்கப்படவில்லை.
எனவே, கொரோனா தொடர்பான சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மக்களிடையே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதுடன், வாக்களிப்பு முறை பற்றியும் விளக்கமளிக்க வேண்டியது வேட்பாளர்களின் பொறுப்பாகும். எல்லாவற்றுக்கும் முன்னதாக வாக்களிப்பதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம்.
வெற்றிக்கான நிகழ்தகவு
இத் தேர்தலில் எந்த பெரும்பான்மைக் கட்சி ஆட்சியமைக்கும் என்பது குறித்து பலவிதமான அனுமானங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும், எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், அவர்கள் அவாவிநிற்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் என்பது எந்தக் கட்சிக்கும், ஏனைய சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் ஆதரவின்றி கிடைப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது.
எனவே, பொதுஜனப் பெரமுண ஆட்சியமைத்தாலும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் கட்சிகளின், தனிப்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு ஏதோவொரு காரணத்திற்காக அவர்களுக்கு அவசியப்படாமல் போகாது.
இந்தக் காரணத்திற்காக மட்டுமன்றி, விகிதாசார தேர்தல் முறையின் அனுகூலங்களைப் பயன்படுத்தி அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காகவும் கணிசமான எம்.பி.க்களை முஸ்லிம் சமூகம் தெரிவு செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், அவர்கள் 'தகுதியானவர்களாக' இருப்பதென்பது எண்ணிக்கையை விட முக்கியமானதாகும்.
அடிப்படையற்ற ஊகங்கள்.
உண்மையாகச் சொல்லப் போனால், தனித்து முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஏனைய வேட்பாளர்கள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளில் போட்டியிடும் முஸ்லிம்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருடைய வெற்றியும் நிச்சயிக்கப்பட்டதாயில்லை.
'காங்கிரஸ்கள்' உள்ளடங்கலாக அனைத்து முஸ்லிம் கட்சிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கடுமையான களச் சவால்கள் இருக்கின்றன. இதில் யாரும் விதிவிலக்கல்ல.
அதேபோல் குறிப்பிட்ட இரு முஸ்லிம் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையில் சில இடங்களில் உள்ளகமாக ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளும் விருப்பு வாக்குச் சண்டைகளும் மேற்சொன்ன இலக்கை அடைவதில் பாரிய தடைக் கற்களாக தெரிகின்றன.
இதேவேளை, மலைநாடு மற்றும் தென்னிலங்கையில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தம்மைச் சுற்றி வாழும் மக்களைப் பொறுத்து ஓரளவுக்கு கவனமாக, இனம் என்ற அடையாளத்திற்கு அப்பாலான அணுகுமுறைகளைக் கையாண்டாலும் அவர்களது வெற்றிக்கும் கடுமையாக பாடுபட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
உண்மையில், முஸ்லிம் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரு ஒன்றிணைந்த வியூகத்தை வகுத்திருக்க வேண்டும். யார் அல்லது எந்தக் கட்சி எந்தப் பிரதேசத்தில், எவ்வாறு போட்டியிடுவது என்பதையும், யார் விட்டுக் கொடுப்பது என்ற வியூகத்தையும் வகுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த விருப்பம் ஒரு கனவாகவே இருக்கின்றது. எல்லோரும் எல்லா இடத்திலும் போட்டியிட்டு குட்டையைக் குழப்புகின்ற வேலைதான் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த இலட்சணத்தில், கட்சித் தலைவர்கள், முக்கிய வேட்பாளர்கள் காட்டுகின்ற கணக்குகளும், கட்சி சார்பானவர்கள் வெளியிடுகின்ற ஊக அடிப்படையிலான புள்ளிவிபரங்களும் அறிவுபூர்வமானவையாகத் தெரியவில்லை. ஒரு மாவட்டத்தில் ஒரு அணிக்கு 2 ஆசனங்கள்தான் கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் இருக்கையில் 5 ஆசனங்கள் கிடைக்குமென்கின்றனர்.
'ஒரு மாவட்டத்திற்கான மொத்த ஆசனங்களே 10 என்றால், இவர்கள் காட்டுகின்ற கணக்கைப் பார்த்தால் ஆசனங்களை 20ஆக கூட்ட வேண்டும் போலிருக்கின்றது' என்றார் ஒரு முதியவர்.
மு.கட்சிகளின் வியூகம்
ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தலில் றவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் பசீர் சேகுதாவூதை தவிசாளராகக் கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதுதவிர பெரும்பான்மைக் கட்சிகளில் கணிசமான முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
தேசிய காங்கிரஸ் கட்சி மூன்று மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது. அதில் திருமலை மாவட்டத்திற்கான மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் அரசியலில்; முக்கியமான வகிபாகத்தைக் கொண்டுள்ள அரசியல்வாதிகளில் அதாவுல்லாவும் ஒருவர். உரிமை அரசியல் தொடர்பான பல விமர்சனப் பார்வைகள் இருந்தாலும், இம்மாகாணத்தில் மர்ஹூம் அஷ்ரபுக்குப் பிறகு அபிவிருத்தி அரசியலை சிறப்பாக மேற்கொண்டவர்கள் ஹிஸ்புல்லாவும் அதாவுல்லாவும் என்பது பொதுவான மக்கள் அபிப்பிராயமாகும்.
இருப்பினும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லாவைப் போலவே தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவும் தோல்வியுற்றார். அதாவுல்லா எடுத்திருந்த நிலைப்பாடும் அரசியல் போக்கும் மட்டுமன்றி மக்கள் காங்கிரஸ் திகாமடுலை மாவட்டத்தில் போட்டியிட்டமையும் இதற்குக் காரணமெனலாம்.
அதிகாரமில்லாமல் போன கடந்த 5 வருடங்களில் மீள்வாசிப்பொன்றை நிகழ்த்தி, அவர் மீண்டும் இத்தேர்தலில் புதிய வியூகத்துடன் களமிறங்கியுள்ளதாக தெரிகின்றது.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்றத்தில் 1 தேசியப்பட்டியல் உறுப்பினர் உள்ளடங்கலாக 5 எம்.பி.க்களை பெற்றிருந்தது. இம்முறை திகாமடுல்லை மாவட்டத்தில் தனித்தும், புத்தளத்தில் மு.கா.வுடன் சேர்ந்தும் ஏனைய பல மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
வடக்கில் பல அபிவிருத்திகளை றிசாட் செய்திருந்திருப்பதுடன்;, முஸ்லிம்களுக்காக உணர்ச்சி பூர்வமாக பேசுகின்ற ஒரு சில அரசியல்வாதிகளில் ஓருவரும் ஆவார். இவ்வாறான உரைகள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படுவதும் உண்டு.
வில்பத்து விவகாரம் தொடக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொட்டு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் முகம் கொடுக்க நேர்ந்தமையும் விசாரணைகளுக்காக அலைக்கழிக்கப்படுகின்றமையும் அரசியலில் அவர் முழுமையான ஈடுபாடு காட்டுவதில் பெரும் சவாலாக இருக்கின்றன எனலாம். இதையெல்லாம் தாண்டியே, அவர் தலைமையிலான கட்சி அதிக எண்ணிக்கையான எம்.பி.க்களை பெறும் நோக்கோடு களமிறங்கியுள்ளது.
முஸ்லிம் அரசியலில் குறிப்பிடத்தக்க கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை புத்தளம் நீங்கலாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த முறையைப் போலவே தனித்துப் போட்டியிடுகின்றது. வாய்ப்புள்ள ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது. கடந்த பாராளுமன்றத்தில் 2 தேசியப் பட்டியல் எம்.பி உள்ளடங்கலாக 7 எம்.பி.க்களை (ஐ.தே.க மற்றும் மு.கா. ஊடாக) பெற்றிருந்தது.
அஷ்ரப் உயிரோடு இருந்தவரை நாட்டில் பொதுவாகவும் குறிப்பாக கிழக்கிலும் முஸ்லிம்களால் அதிகம் நேசிக்கப்பட்ட கட்சி மு.கா. என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. அதில் இருந்து வெளியேறி வந்தவர்கள்தான் புதிய கட்சிகளை தொடங்கினார்கள் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், கடந்த 15 வருடங்களில் மு.கா.வின் அரசியல் சற்று சோபை இழந்து போனதாகவே தெரிகின்றது.
றவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் பிரதான அரசியல்வாதியாக தலைவராக நோக்கப்படுவதுண்டு. இருப்பினும், அதிக பொறுப்பைச் சுமந்த மு.கா. கட்சி அபிவிருத்தி அரசியலிலோ சாதனை நிகழ்த்தாமல் வெறும் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்ற விமர்சனமே இதற்குக் காரணமெனலாம்.
இருப்பினும், இதையெல்லாம் தாண்டி அஷ்ரபுக்காகவும் வேறு ஏதேனும் அடிமன உணர்வுக்காகவும் அக்கட்சியையே நேசிக்கின்ற மக்கள் இன்னும் இருக்கவே செய்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில், இக்கட்சியானது முதன்மையான முஸ்லிம் கட்சி என்ற ஸ்தானத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் இத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இதேவேளை, பெரும்பான்மைக் கட்சிகளில் நேரடியாக போட்டியிடுகின்ற தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த அரசியலை விட இன, மதம் கடந்து தாம் செய்த சேவைகள் அல்லது விஞ்ஞாபனங்களை முன்னிறுத்தியே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஹலீம், முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், பௌசி என இவ்வகையானோரின் பட்டியல் நீள்கின்றது.
களச் சவால்கள்
இவ்வாறான பின்னணிகளுடன் முஸ்லிம் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டாலும், தேர்தலில் வெற்றியிலக்கை அடைவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. குறிப்பாக முஸ்லிம் கட்சித் தலைவர்கள் எவ்வாறான வியூகங்களை வகுத்தாலும் எல்லா முஸ்லிம் கட்சிகளுக்கும் அந்தக் கட்சியின் பருமன் மற்றும் செயற்பாட்டு எல்லைகளுக்கு ஏற்றாற்போல் சிறியதும் பெரியதுமாக நிறையவே சவால்கள் இருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது.
தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை, நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளைக் கூறி ஆணையைக் கோருங்கள். மாறாக மக்களை மீண்டும் பேய்க்காட்டி அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க எந்த கட்சியும் வேட்பாளரும் நினைக்க வேண்டாம்.
மேற்குறிப்பிட்ட எல்லா அணிகள், கட்சிகளிலும் தரமான வேட்பாளர்கள் இருந்தால் அவர்கள்; தெரிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளோ மக்களோ எது சாத்தியம்? எது சாத்தியமில்லை? என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் தனிப்பட்ட ரீதியில் முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஒரு சமூகமாக முஸ்லிம்களும் இம்முறை தோற்றுப் போகலாம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே, தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரி, வாக்களிக்கும் மக்களும் சரி தமது ஆதரவுத் தளம் பற்றிய மாயத் தோற்றங்களை அசட்டுத்தனமாக நம்பியிருக்காமல், உண்மையான வாக்காளர்களை வசப்படுத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முழுமூச்சாக செயற்பட வேண்டியுள்ளது.
ஏ.எல்.நிப்றாஸ்
(வீரகேசாி - 19.07.2020)