சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கசையடித் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக சவுதி அரேபிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள சகல நீதிமன்றங்கள் ஊடாக கசையடித்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்பரல் மாதம் சவுதி அரேபியாவில் விதிக்கப்படும் கசையடித் தண்டனை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் நடை முறை அமுல்ப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நீதி அமைச்சரும், உச்சநீதிமன்றத்தின் தலைவருமான ஷேக் வலீத் அல்-சமானி சவுதி அரேபியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
சவுதி அரேபியாவில் இதற்கு முன்னர் சில குற்றங்களுக்கு பகிரங்கமாக கசையடித் தண்டனை வழங்கப்பட்டு வந்தது இதில் தண்டனை வழங்குவோர் வரம்பு மீறல்களில் ஈடுபடுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது கசையடித் தண்டனை பெற்று சிறையில் உள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சில குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பருவ வயதை அடையாத சிறார்கள் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பகரமாக சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.

